தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த “திங்க்ஃபெஸ்ட்’ நிகழ்வின்போது, கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தன்னிடம் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இவ்வழக்கில் 2021-ஆம் ஆண்டு மே மாதம் கோவா விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது விடுதலையை ரத்து செய்து, அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அதோடு அவருக்கு இவ்வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
சாட்சியாக மாறிய மின்னஞ்சல்
இவ்வழக்கு விசாரணையின் போது, பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேஜ்பால் அனுப்பிய மின்னஞ்சல் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா அதனை கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அந்த மின்னஞ்சல் செய்தியில், “என்னுடன் பணியாற்றிய சக ஊழியர் ஒருவரின் மகளாகவும், பின்னர் எனது அலுவலகத்திலேயே ஒரு சக ஊழியராகவும் நான் மிகவும் பெருமைப்பட்ட ஒரு இளம் பெண் நீங்கள்.
மிகுந்த நேர்மையும் சிறந்த எதிர்காலமும் கொண்ட ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தொழில்ரீதியாக வளர்ந்து முதிர்ச்சியடைந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
எனவே, நமக்கிடையேயான அந்த நீண்டகால நம்பிக்கையையும் மரியாதையையும் கொண்ட உறவை நான் மீறிவிட்டேன் என்பதை ஏற்றுக்கொள்வது எனக்கு விவரிக்க முடியாத வேதனையை அளிக்கிறது. நவம்பர் 7 மற்றும் 8, 2013 ஆகிய தேதிகளில் உங்களுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நான் முயன்ற அந்த அவமானகரமான தவறுக்கு வேண்டாம் என்று நீங்கள் தெளிவாக மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் நான் அத்தவறை செய்தேன். அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்,” என்று அவர் எழுதினார். இது அத்தகைய சம்பவங்கள் நடந்ததை ஒப்புக்கொள்வதற்குச் சமம் என்று துஷார் மேத்தா வாதிட்டார்.