மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 80-ஆவது பிறந்தநாள் இன்று. இளையராஜா – எஸ்.பி.பி கூட்டணி என்பது தமிழ்த் திரையிசையில் முக்கியமான வெற்றிக் கூட்டணி.
இளையராஜா இசையில் அதிக ஹிட் பாடல்களைப் பாடியவரும் எஸ்.பி.பி-தான். எஸ்.பி.பி-யின் 80-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருடனான நட்பு, தமிழ்த் திரையிசைக்கு அவர் ஆற்றிய பங்கு பற்றி உருக்கமாகப் பேசி ஒரு காணொளியை அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் இளையராஜா.

அந்தப் பதிவில் இளையராஜா, “பாலா இல்லாதது என் மனதில் ஒரு பெரிய வெற்றிடமாகத்தான் இருக்கிறது. ஏன்னென்றால், அதற்கு ஈடான ஒரு குரல் இங்கு இல்லை. அவரைப் போன்று நகலெடுக்க முயற்சிக்கும் குரல்கள்கூட, சரியாகப் பாடுகிறார்களா என்றால், இல்லவே இல்லை.
அவரைப் போல் யாராலும் பாடவே முடியாது. அவருடைய அர்ப்பணிப்பை எப்படி நகலெடுக்க முடியும்? இதுவரை, என் இசையில் வெளியான பெரும்பாலான ஆண் குரல் பாடல்களை எஸ்.பி.பி மட்டும்தான் பாடியிருக்கிறார். அது அவருடைய புகழால் மட்டும் அல்ல, அவருடைய திறமையால் நிகழ்ந்த விஷயம்.
அவருடைய அசாத்திய திறமையால், ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாகப் புரிந்துகொள்வார். மேலும், அந்தப் பாடலில் என்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்பட வேண்டுமோ, அதற்கேற்ப அதிகக் கவனத்துடன் பாடுவார். அதோடு அந்தப் பாடலுக்காக அவர் இன்னும் கூடுதல் உழைப்பையும் போடுவார்.
என்னுடைய எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அவர் முழுமையாக நிறைவேற்றினார். அது மிகவும் அற்புதம். அதையெல்லாம் விட, அவர் என் சிறந்த நண்பர். அதையும் தாண்டி, இதுவரை இருந்த பின்னணிப் பாடகர்களிலேயே அவருடைய திறமை என்பது அசாத்திய திறமையாகும்.
50,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இசை உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதுவரை யாரும் இப்படிப் பாடியதும் இல்லை.

யாரும் இந்தச் சாதனையை அடைந்ததும் இல்லை. வார்த்தைகளுக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்டு நடக்கக்கூடிய இந்த விஷயங்கள் எல்லாம் ரொம்ப அற்புதமான ஒரு சமாச்சாரம். அவனுக்குப் பக்கத்தில் யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை!
இவ்வளவு ஏன், இன்னும் எத்தனை பாடகர்கள் வந்தாலும்கூட, அதில் நூறில் ஒரு பங்கைக்கூட அவர்களால் நெருங்க முடியாது!” எனக் கூறியிருக்கிறார்.