ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பதக்கங்களும் சாதனைகளும் இதோ…
வித்யா ராம்ராஜ் – கோவை
ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை அள்ளி, இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கோவை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி, பெண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.

இதில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டி, பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார். ஒரே போட்டியில் பதக்கங்களையும் சாதனையையும் சேர்த்து வசப்படுத்தியிருக்கிறார் வித்யா.
இளவேனில் வாலறிவன் – கடலூர்
துப்பாக்கிச் சுடுதலில் தனது துல்லியமான ஆட்டத்தால் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருக்கிறார் இளவேனில் வாலறிவன்.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவிலும், அதே பிரிவின் அணிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்த இளவேனில் தற்போது குஜராத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தாலும், ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருப்பது அவரது முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.
ஜி. கமலினி – மதுரை
மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஜி. கமலினி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக 2026 ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியின் ஒரு பகுதியாக கமலினியும் சாதனை படைத்துள்ளார்.
பரணிகா இளங்கோவன் – மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திலாபுரத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன், தடகளத்தின் போல்வால்ட் பிரிவில் 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதைவிட முக்கியமாக, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் போல்வால்ட் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒரு பதக்கம் மட்டுமல்ல… இந்திய போல்வால்ட் வரலாற்றிலேயே புதிய பக்கத்தைத் திறந்திருக்கிறார் பரணிகா!
ஜோஷ்னா சின்னப்பா – சென்னை
சென்னையைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஏற்கெனவே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் அணி ஸ்குவாஷ் அரையிறுதியில் ஹாங்காங்கிடம் இந்திய அணி 1–2 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

இதன்மூலம் இந்திய பெண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த ஆசிய விளையாட்டில் ஜோஷ்னா சின்னப்பா கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு வெண்கலம், பெண்கள் அணி பிரிவில் மற்றொரு வெண்கலம் என இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஷமீனா ரியாஸ் – சென்னை
சென்னையைச் சேர்ந்த இளம் ஸ்குவாஷ் வீராங்கனை ஷமீனா ரியாஸ், ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார்.

மகளிர் அணி பிரிவில் இந்தியாவுக்காக விளையாடிய ஷமீனா, வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டில் தனது முதல் பங்கேற்பிலேயே பதக்கத்தைப் பதிவு செய்திருக்கும் அவர், தமிழகத்தின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனைகளில் நம்பிக்கை தரும் பெயராக உருவெடுத்திருக்கிறார்.
அபினயா ராஜராஜன் – தென்காசி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த அபினயா ராஜராஜன், தடகளத்தில் இந்திய அணிக்காக ஓடி ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

கலப்பு 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் தனது முதல் பதக்கத்தைப் பதிவு செய்துள்ள அபினயா, தமிழகத்தின் தடகள வரிசையில் மற்றொரு நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக உருவெடுத்திருக்கிறார்.