ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்கிற என்.சந்திரசேகரனின் எண்ணம்தான் நோயல் டாடாவின் மிகப்பெரிய அதிருப்தி.
நோயல் டாடா vs சந்திரசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகித பங்குகள் டாடா அறக்கட்டளையிடம்தான் உள்ளது.
டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா. டாடா சன்ஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் டாடா அறக்கட்டளைக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

2017-ம் ஆண்டிலிருந்து இரண்டு பதவிக்காலங்களாக, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இருந்து வருகிறார். பார்சி இனம், டாடா குடும்பத்தைச் சேராத டாடா சன்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவர் இவர்.
2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்.சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிகிறது. இவரையே தலைவர் பதவியில் நீட்டிக்க வேண்டும் எனக் கோரி நடந்த போர்டு மீட்டிங்கில் நோயல் டாடாவைத் தவிர, அங்கிருந்த 4 இயக்குநர்களுமே சாதகமாக வாக்களித்தனர்.
ஒருமித்த மனதாக வாக்குகள் கிடைக்கவில்லை என்று கடந்த மாதம், ‘மீண்டும் தலைவர் பதவி போட்டியில் இருக்கப்போவதில்லை’ என்று வெளிப்படையாக அறிவித்தார் என்.சந்திரசேகரன்.
அதன் பிறகு, ‘மீண்டும் அவரே தலைவராகத் தொடர வேண்டும்’ என்று இயக்குநர்கள் சம்மதிக்க வைத்த பின் நடந்த போர்டு மீட்டிங்கிலும் நோயல் டாடா சந்திரசேகரனுக்கு எதிராகவே வாக்களித்தார்.
‘நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம். சந்திரசேகரனைத்தான் மீண்டும் தலைவராக்க வேண்டும்’ என்று டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர்கள் சொல்ல…
‘டாடா அறக்கட்டளைக்குத்தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரை நியமிப்பதில் அதிக உரிமை இருக்கிறது’ என்று போர்க்கொடி தூக்குகிறார் நோயல் டாடா.
நோயல் டாடா ‘டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடக் கூடாது’ என்பதில் குறியாக இருக்கிறார். சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நீட்டித்தால், அவர் நிச்சயம் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடுவதை முன்னெடுப்பார்.
சட்ட சிக்கல்!
இதுதான் இந்த இருவருக்கான மோதல் தளமாக அமைந்துவிட்டது. நோயல் டாடா, சந்திரசேகரனைத் தாண்டிப் பார்க்கும் போது, டாடா சன்ஸ் நிறுவனம் சட்டம், விதிமுறைகளின்படி, பட்டியலிடப்பட வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறையின்படி, ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள எந்தவொரு வங்கி சாராத நிதி நிறுவனமும் மூன்று ஆண்டுகளுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.
2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி டாடா சன்ஸ் நிறுவனத்தை ‘Upper Layer’ நிதி சாராத நிதி நிறுவனமாக வகைப்படுத்திவிட்டது.
அந்தக் காலக்கட்டத்தை வைத்துப் பார்த்தால், இந்நேரத்திற்கு டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
இப்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2.01 லட்சம் கோடி ஆகும்.
‘எங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிடச் சொல்லக் கூடாது. எங்களுக்கு நீங்கள் கொடுத்த பதிவு சான்றிதழைத் திரும்பத் தந்துவிடுகிறோம்.
அதன்பின், எங்களுக்கு ‘முதலீட்டு நிறுவனம்’ என்னும் வகையிலிருந்து விலக்கு அளியுங்கள்’ என்று இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக்கொண்டது டாடா சன்ஸ் நிறுவனம்.
ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை இந்திய ரிசர்வ் வங்கி.

ரிசர்வ் வங்கியின் ‘செக்’
இதன்பின், ஒருவேளை, ‘நாங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படக் கூடாது’ என்று மும்பை உயர் நீதிமன்றத்தை டாடா சன்ஸ் நிறுவனம் அணுகினாலும் அணுகும்.
இதற்கு ‘செக்’ வைப்பது போல, மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி டாடா சன்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தில் தங்களை ‘Caveat’ ஆகச் சேர்த்துக்கொண்டது.
இதனால், இனி டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடுவது குறித்து நீதிமன்றத்தை அணுகினால், நிச்சயம் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் வாதாட வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த வழக்கில் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் எதுவும் செய்ய முடியாது.
நோயல் டாடா கண்டுபிடித்திருக்கும் ‘லூப் ஹோல்’
சட்டச் சிக்கல் இவ்வளவு இருக்கும் போது, டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படக் கூடாது என்பதற்கான ‘லூப் ஹோலை’ கண்டுபிடித்திருக்கிறார் நோயல் டாடா.
டாடா அறக்கட்டளை நேற்று முன்தினம் (செப்டம்பர் 28) ‘டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படக் கூடாது’ என்பதற்காக ஒரு பிளானைச் சொல்லியிருக்கிறது.
டாடா சன்ஸ் நிறுவனத்துடன் டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன்ஸ் (TESS) மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் (TCE) நிறுவனங்களை இணைப்பதுதான் அந்தத் திட்டம்.
இப்படி இணைக்கப்பட்டுவிட்டால், டாடா சன்ஸ் நிறுவனம் முதலீட்டு நிறுவனமாகவோ, வங்கி சாராத நிதி நிறுவனமாகவோ ஆகாது. இதையொரு பிளானாகப் போட்டுக் காயை நகர்த்துகிறார் நோயல் டாடா.

இதற்கு போர்டின் சம்மதம் தேவை. ஆனால், போர்டில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்படுவது பிரச்னை இல்லை.
இவர்களை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறார் நோயல் டாடா?
டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்டால், நிறுவனம் குறித்த வெளிப்படைத்தன்மை வரும் என்பதுதான் நோயல் டாடாவைப் பயமுறுத்துகிறதா?
நோயல் டாடாவின் முடிவை மீறி சந்திரசேகரன் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நீடிப்பாரா?
எதற்கும் இதுவரை பதில் இல்லை!