
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த முறை நடைபெற்ற அவை நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தை மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையேயும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை இளம் தலைமுறையினர் ஆர்வமாக பார்த்த நிலையில், எந்தெந்த உறுப்பினர்கள் தங்களது பேச்சு, செயல்பாடு மற்றும் அணுகுமுறையால் மக்களின் கவனத்தை ஈர்த்தனர் என்ற விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிகம் மக்களால் கவரப்பட்ட டாப் 10 செலிபிரிட்டி உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரை டேக் செய்து வருகின்றனர்.
1. முதலமைச்சர் விஜய்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அமைதியாக அவையை கவனித்த அவர், தேவையான தருணங்களில் மட்டும் தனது கருத்துகளை பதிவு செய்தார். குறிப்பாக, சட்டமன்றத்தில் அவர் பேசிய பஞ்ச் டயலாக்குகள், ஆக்ஷன்கள், எதிர்க்கட்சிகளை கையாண்ட விதம் என அதிகம் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வைரலாகின.
“இடைத்தேர்தலிலாவது யாருக்காவது நல்லது நடக்கணும்ல” என்று கூறியது, எதிர்க்கட்சியினர் குறித்த மூன்று முக்கியமான ஆதார கோப்புகள் இருப்பதாக கூறியது, பதிலுரையின்போது எதிர்க்கட்சியினர் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று கூறிய அனைத்தும் சினிமா பஞ்ச் டயலாக்ஸ் போல ரீல்ஸ் கன்டென்டாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சும்மாவே நான் காட்டு காட்டுனு காட்டுவேன்… இப்போ காட்டு… காட்டு.. காட்டுனு காட்ட சொல்றாங்க என்று கூறியது, சட்டமன்றத்தில் இருக்கை மாற்றி அமர்ந்தது என முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வந்த நேரமெல்லாம் சம்பவங்கள் அரங்கேறின.
2. உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சியின் முக்கிய குரலாக சட்டப்பேரவையில் செயல்பட்ட உதயநிதி, பல்வேறு விவகாரங்களில் அரசை கேள்வி எழுப்பி கவனம் பெற்றார். மக்கள் பிரச்னைகள், நிர்வாக குறைபாடுகள் தொடர்பாக தொடர்ந்து கேள்விகளை முன்வைத்தது அவரது செயல்பாட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
அரசை குற்றம்சாட்டுவது மட்டுமின்றி, அரசு முந்தைய அரசை குற்றம்சாட்டினால் ‘நீங்கள் முதலில் நம்பவேண்டும் இது திமுக ஆட்சி அல்ல, உங்களுடைய ஆட்சி, நாங்கள் கேள்வி கேட்போம் அதுதான் எங்கள் வேலை” என்ற பதிலடிகள் மாஸ். அதன்பின் அமைச்சர்களை சங்கி அமைச்சர், லாட்டரி அமைச்சர், பவுடர் அமைச்சர், பட்டிமன்ற அமைச்சர், ப்ளாக்ல டிக்கெட் வித்த அமைச்சர், பாத்ரூம் அமைச்சர் என்றும், அதைவிட முதலைமைச்சரையே “ரீல்ஸ்காக இல்லாம, தேவையில்லாத குட்டி கதைகள் சொல்லாம, நல்லா Prepare பண்ணிட்டு வாங்க” என்று கூறியது, “என்ன சொல்லிட்டு ஓடிபோய்ட்டாரா” என்று விஜயை நேரடியாக விமர்சித்ததெல்லாம் சட்டமன்றத்தின் ஹைலைட் நிகழ்வுகள் என்றே கூறலாம்.
3. சபாநாயகர்
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் சபாநாயகரும் ஒருவர். அவையை ஒழுங்காக நடத்துவது, உறுப்பினர்களின் பேச்சுகளை கட்டுப்படுத்துவது, தேவையற்ற கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் நடுநிலையான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். இதனால் சமூக வலைதளங்களிலும் சபாநாயகர் குறித்து அதிகமான விவாதங்கள் நடைபெற்றன.
அதிலும், குறிப்பிடப்படவேண்டிய ஒன்று சபாநாயகர் எப்பொழுதும் ஆளுங்கட்சியினருக்கு அதிகம் பேச வாய்ப்பு தருவது, எதிர்கட்சியினரின் பேச்சுக்களை அவைகுறிப்பில் இருந்து நீக்குவது என்ற நிலைமையை மாற்றி எதிர்கட்சியினரை விட ஆளுங்கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளையே அவைகுறிப்பில் இருந்து நீக்கியதெல்லாம் பெரிய ட்விஸ்ட். எதிர்கட்சித் தலைவராலேயே பாராட்டு பெரும் அளவிற்கு நடுநிலைமையுடன் இருந்ததால் சட்டமன்றத்தின் “Most Favourite” ஆக மாறினார் என்றால் மிகையாகாது.
4. எ.வ. வேலு
எதிர்க்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எ.வ. வேலு, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் கட்சியின் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டார். உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவது, அவையின் நடைமுறைகளை பின்பற்ற வலியுறுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலம் கவனம் பெற்றார்.
இவரின் பேச்சுக்களில் அதிகம் கவனம் பெற்றவை “எங்க ஆட்சி சரியில்லைன்னு தான நாங்க எதிர் கட்சில ஒக்காந்திருக்கோம், அதான் எங்களுக்கு தெரியுமே, நீ மேசைய தட்டுறதுனால நாங்க ஆளுங்கட்சியாவா வந்துர முடியுமா” என்ற பேச்செல்லாம் சட்டமன்றத்தில் நகைப்பூட்டி கவனம் பெற்றவை. எதிர்க்கட்சியின் கொறடாவாக முக்கிய உரைகளை ஆற்றி தனிக்கவனம் பெற்றார் என்றே கூறலாம்.
5. கே.என். நேரு
கட்சியின் மூத்த தலைவராகவும், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகவும் இருக்கும் கே.என். நேரு, சட்டப்பேரவையில் அரசியல் அனுபவம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தார். பல்வேறு தருணங்களில் வரலாற்று அரசியல் நிகழ்வுகளை மேற்கோள் காட்டி பேசியது உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
தவெக தொடர்ந்து திமுகவை தீயசக்தி என்று குறிப்பிட்டபோதெல்லாம், அதென்ன தீயசக்தி அப்ப நீங்க என்ன தூயசக்தியா என்று அவரது தொனியில் கேட்டதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களால் கவரப்பட்ட்டவை.
6. ஆதவ் அர்ஜுனா
தனது உரைகளில் புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களை பயன்படுத்தி பேச முயன்றவர் என்ற வகையில் ஆதவ் அர்ஜுனா கவனம் பெற்றார். இந்த கூட்டத் தொடரில் யாருடைய பேச்சுகள் அதிகம் நீக்கப்பட்ட்து என்ற ஒரு லிஸ்ட்டை எடுத்தால், அதில் டாப் லிஸ்டில் ஆதவ் அர்ஜூனாவின் பெயர் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அந்த விவாதங்களில் அதிகம் திமுகவை குற்றம் சாட்டும் நோக்கத்துடன் பேசியது, அதிலும் முக்கியமாக அவரது மாமனார் பற்றி பேசியதும் எதிர்கட்சித் தலைவரை நோக்கி “அது உங்க அப்பாவதான் கேட்கணும்” என்ற நொடியெல்லாம் சட்டமன்றத்தின் உச்சக்கட்ட பரபரப்பு நிமிடங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இறுதி நாளில் ”நீங்க எந்திரிக்கிற மாதிரி நாங்களும் எந்திரிச்சா” என்று எதிர்க்கட்சியை மிரட்டியது, சபாநாயகரை டென்ஷனாக்கியது. இதனால், சபாநாயகர் ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக கண்டித்தார்.
7. நிர்மல் குமார்
எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலான அவரது உரைகள் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தின. பல நேரங்களில் அவரது கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும், அவை விவாதங்களில் முக்கிய இடம் பெற்றது.
இவர் கிளப்பிய விவாதங்களில் பரபரப்பான ஒன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ‘கரூர் கம்பெனி’ என்றவுடன் உதயநிதி “மாண்புமிகு சங்கி அமைச்சர்” என்றார், உடனேயே நிர்மல் குமார் ‘பாத்ரூமில் மூணுமணிநேரம் உக்காந்திருந்த எதிர்கட்சித் தலைவர்’ என்று கூறியதெல்லாம் சட்டமன்றத்தின் திக் திக் நிமிடங்கள்தான். அதேபோல், இன்றைய தினம் மிசா குறித்து ” மிசாவின் போது திருட்டு வழக்கு, வழிபறி வழக்கு, பெண்கள் சம்மந்தப்பட்ட வழக்கு போன்ற வழக்குகளில் கைதானவர்கள் எல்லாம் மிசாவில் கைதானவர்களாக கருத முடியாது” என்றும் “ஸ்டாலின் மிசாவில் கைதானவர் என்று எந்தவொரு அரசு ஆவணங்களில் இல்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியதெல்லாம் சட்டமன்றத்தின் உச்சம்.
8. ராஜ்மோகன்
பட்டிமன்ற பேச்சு பாணியில் சுவாரஸ்யமாக கருத்துகளை வெளிப்படுத்தும் ராஜ்மோகனின் பேச்சுகள் பலராலும் ரசிக்கப்பட்டன. எளிமையான பேச்சு மற்றும் நகைச்சுவை கலந்த அணுகுமுறை மூலம் பார்வையாளர்களிடம் தனி கவனம் பெற்றார்.
பட்டிமன்ற பேச்சாளரான இவரது பேச்சுக்கள் அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டவை என்று கூறினாலும், ஆக்கபூர்வமான கருத்துக்கள் இவரது பேச்சில் இல்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, எதிர்கட்சித் தலைவர் ‘பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகுவதற்கு முன்னர் திமுகவின் மேடைகளில் பேசியவர் என்றும், அவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்றும் அவரது பேச்சுக்களை எல்லாம் நானும் ரசித்திருக்கிறேன்’ என்று சூசகமாக கிண்டலடித்ததெல்லாம் கவனிக்கவேண்டிய ஒன்று.
இவையெல்லாவற்றையும்விட, ராஜ்மோகன் வைரலானது அவர் அணிந்து வந்த உடையினால் தான் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். அதாவது, சட்டையின் மேல் பட்டை கழட்டி கொண்டு படத்தில் வரும் ஒரு கேரக்டரை போன்று இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் ஒப்பிட்டு ராஜ்மோகனை விமர்சித்தனர். அடுத்த நாளே சட்டையின் மேல் பட்டை போட்டுக் கொண்டு வந்தது பெரும் கவனத்தை ஈர்த்த்து.
9. சௌமியா அன்புமணி
சட்டப்பேரவை விவாதங்களில் தகவல்களை அடிப்படையாக கொண்டு பேசும் அணுகுமுறையால், தன்னுடைய தொகுதிக்கான பிரச்னைகளை மட்டும் கவனம் செலுத்தி சௌமியா அன்புமணி கவனம் பெற்றார். பொதுமக்கள் பிரச்னைகளை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்த விதம் பாராட்டப்பட்டது. குறிப்பாக மக்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது அவரது செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
சட்டமன்றத்தை எவ்வாறு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் விவாதங்களின் போது புள்ளிவிவரகளுடனும், அனைவருக்கும் புரியும்படியும் இவரது பேச்சு அமைந்ததால் இவரும் மக்களின் ஃபேவரைட்தான்.
10. பிரேமலதா விஜயகாந்த்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் அரசியல் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு, மக்கள் பிரச்னைகள் மற்றும் மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்களில் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
அதுமட்டுமின்றி, இந்த சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறுகிறது என்றும், சட்டமன்றம் அமைதியாக நடப்பதில்லை விவாதங்கள் அனைத்தும் நேர விரயத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதை சுட்டிக்காட்டுவது என்று சட்டமன்றத்தில் தனி கவனம் பெற்றார்.
அதைவிட, “ஆதவ் அர்ஜூனா பேசினாலே பிரச்னை வருகிறது” என்று கூறியது தான் ஹைலைட்.
இறுதியாக ஆஸ்டின்: பெயரால் பிரபலமானவர்…
இந்த பட்டியலில் கூடுதலாக பேசப்படும் பெயராக திமுக எம்.எல்.ஏ ஆஸ்டினும் இடம்பெற்றுள்ளார். சட்டப்பேரவை விவாதங்களின் போது சபாநாயகர் பலமுறை “ஆஸ்டின் உட்காருங்கள்” என குறிப்பிட்டு அறிவுறுத்திய தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் காரணமாக அவரது பெயர் மக்களிடையே அதிகம் பரிச்சயமானதாக மாறியது.
எந்த அளவுக்கு என்றால், சபாநாயகரால் அதிகம் உட்காருங்க உட்காருங்க என்று பெயரை குறிப்பிட்டு பிரபலமானவர் ஆஸ்டின். அமைச்சர்கள் சர்ச்சையாக சிறிதளவு கூறிவிட்டால், அடுத்த நொடி சபாநாயகர் இவரை உட்காரும்படி சொல்லிவிடுவார். அந்த வகையில் அவர் பேசியதை விட, சபாநாயகர் அவர் பெயரை அதிகம் பயன்படுத்தியதால் மக்களுக்கு நன்கு பரிட்சயமானார்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மாண்புமிகு முதலமைச்சர்.. மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் என்று கூறியதைவிட, மாண்புமிகு உறுப்பினர் ஆஸ்டின் என்றே தினமும் ஒரு 50 முறையாவது கூறிவிடுவார் சபாநாயகர். அந்தளவிற்கு சபாநாயகரின் பெயர் சொல்லும் பிள்ளையாகவே மாறினார் ஆஸ்டின்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அரசியல் விவாதங்களை தாண்டி, நேரலை மூலம் பொதுமக்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது பேச்சு, செயல்பாடு மற்றும் அணுகுமுறை மூலம் தனித்துவமான கவனத்தை பெற்றுள்ளனர்.