“234 தொகுதிகளிலும் உங்கள் விஜய் தான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்’ என்றார். இந்த ஒரு வார்த்தை மந்திரம் தான் ஒரு விரல் புரட்சியில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது” என்றார் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி தவெக வேட்பாளர் சத்யா.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சத்யா 61,161 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் திவ்யா 59,851 வாக்குகளும், திமுக வேட்பாளர் சி கே ராஜா 55,709 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளரை விட 1,310 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி முகத்தோடு வெற்றிச் சான்றிதழ் பெற காத்திருந்த சத்யா நம்மிடையே பேசுகையில்,
“தலைவர் விஜய் என்ற தனி மனிதரின் முகத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்த தலைவருக்கே இந்த வெற்றி சேரும்.
தொகுதி மக்கள் பலருக்கு என்னை யார் என்றே தெரியாது. அப்படி இருந்தும் எனக்கு வாக்கு அளித்து மக்கள் வெற்றி பெற வைத்தார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தலைவர் விஜய் தான். அவரது வெற்றி முகம் தான் எனக்கு வாக்காக மாறியது.