தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்று சாதித்திருக்கிறது. ஆனாலும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் சிக்கலும் ஏற்பட்டது.
இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, பெரும்பான்மையை நிரூபித்து, முதல்வர் அரியணையை நெருங்கியிருக்கிறார் விஜய். இன்று பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.
விஜய், தன்னுடைய அரசியல் வருகை பற்றி நீண்ட வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டார் என்பதுதான் நிதர்சனம்.
சூசகமாக அது பற்றி விஜய்யும் பல மேடைகளிலும், நேர்காணல்களிலும் பேசியிருக்கிறார். விஜய் ஒரு முன்னணி நடிகராக உருவெடுத்தப் பிறகு, அவரின் அரசியல் வருகை பற்றிய கேள்விகளும் அவரைத் தொடர்ந்தன.
கடந்த 2011-ஆம் ஆண்டு விஜய், ஓர் ஊடகத்திற்கு அளித்திருந்த பேட்டியில், அவருடைய அரசியல் வருகை பற்றி, “நான் நடிகனாக வேண்டுமென விரும்பினேன். ஆனால், இவ்வளவு பெரிய நடிகனாக நான் வருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. காலம் என்னை இங்கு உட்கார வைத்திருக்கிறது.
அதே காலம், ஒரு நாள் என்னை ஓர் இடத்தில் உட்கார வைக்கும். அதற்கான காலம், சூழல், இடம் என அனைத்தும் அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், அதற்கான நேரம் இது கிடையாது.
அந்தச் சமயத்தில் நான் கண்டிப்பாக வருவேன். அதற்கான அடித்தளத்தை நான் வலுவாக்க வேண்டும். அதற்கான வேலைகளை நான் செய்து கொண்டே இருப்பேன்” எனக் கூறியிருந்தார்.
அப்படியான அடித்தளத்தை தன்னுடைய மக்கள் இயக்கம் மூலமாக அமைத்து, சரியான காலத்திற்குக் காத்திருந்து அரசியலுக்குள் வந்தார் விஜய். அவரின் வருகை, தமிழக அரசியலில் பெரும் அலையாக உருவெடுத்து அவருக்கு வெற்றி வாய்ப்பையும் இப்போது பெற்றுத் தந்திருக்கிறது.