குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு இருந்தாலும், TNPSC குரூப் 1 தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், அதனைத் தொடராமல் சமூக சேவை மற்றும் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர்ந்தபடியே சிகை அலங்கார வேலை செய்துவருகிறார், காரைக்குடி பாலமுருகன்.
காரைக்குடி நூறடிச் சாலையில் இவரது சிகை அலங்கார நிலையம் (சாந்தி ஹேர் டிரஸ்ஸர்ஸ்) உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி, பெரிய அலுவலகங்களில் வேலை செய்பவர்கள்கூட இவரது கடையில் காத்திருந்து சிகை திருத்தம் செய்து செல்கின்றனர்.
மேலும், அவர் வேலை முடித்து இரவு UPSC தேர்வுக்கு (2 வருடங்களாக) ஆயத்தமாதல், அழகப்பா பல்கலைக்கழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பற்றிய (MSME) முனைவர் பட்ட ஆய்வு… மீண்டும் மாலை சிகை அலங்காரப் பணி எனத் தனது கால அட்டவணையைப் பிரித்து வைத்திருப்பதாகக் கூறுகிறார்.
“நான் பத்தாவது படிக்கும்போதே இந்த வேலையை அப்பா, மாமாவிடம் கற்றுக்கொண்டேன். இந்தப் பணியினை நான் தொழிலாக எண்ணவில்லை… எத்தனையோ பொருளாதாரப் பின்புலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் நிலை அறிந்து பணம் வாங்குவதில்லை. அதை ஒரு சேவையாகத்தான் பார்க்கிறேன்.
சிறுவயதிலேயே என்னை ஒருவர் படிக்கவைத்தார். அதேபோல நானும் ஒவ்வொரு பருவம் முடிவிலும் என் சுற்றுப்புறத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை நண்பர்களின் உதவியோடு கண்டறிந்து, அவர்களுக்கு என் சொந்தச் செலவிலோ அல்லது அதே சேவை மனப்பான்மை கொண்ட என்னிடம் சிகை திருத்தம் செய்யும் வாடிக்கையாளர்கள் சிலரிடம் உதவி பெற்றோ உதவி செய்து வருகிறேன்.