Vikatan Plus – 23 August 2026 – “சமூக மாற்றத்துக்கு பெரிய காரியங்கள்தான் செய்யணும்னு இல்ல!’’ – ‘நாங்களும் இருக்கிறோம்’ சாதிக் | ullathil nalla ullam series 50

Spread the love

வாழ்க்கையில சில மனிதர்களைப் பார்த்திருப்போம். சில மனிதர்களைக் கவனிச்சிருப்போம். அப்படி ஒருத்தரை கவனிக்க ஆரம்பிக்கும்போதுதான், நாம எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவங்கனு புரியும். நம்மைச் சுற்றி இருக்கிறவங்க சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட எவ்வளவு சிரமப்படுறாங்கனு தெரியும். இப்படி நான் சமூகத்தை கவனிக்க ஆரம்பிச்சப்போதான், உதவி தேவைப்படுறவங்க நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்காங்கனு புரிஞ்சுது. என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பிச்சேன். என்னைப் பார்த்து ஃபேஸ்புக் மூலமா ஐயப்பன் என்னோட இணைஞ்சாரு. ஒருத்தர் தொட்டு ஒருத்தர்னு இப்போ எங்க குழுவுல 150 பேர் இருக்காங்க. எங்களால முடிஞ்ச பணிகளை செஞ்சுட்டு இருக்கோம்” – தங்களின் 12 ஆண்டுக்கால சமூகப் பணிப் பயணத்தை இப்படிப் பகிர்ந்துகொள்கிறார் சாதிக்.

திருப்பூரைச் சேர்ந்த சாதிக், காய்கறிக் கடை நடத்தி வருகிறார். தன்னைப் போலவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களை ஒருங்கிணைத்து, ‘நாங்களும் இருக்கிறோம்’ என்ற அமைப்பை 2014-ம் ஆண்டில் தொடங்கியிருக்கிறார். தங்கள் அமைப்பை முறையாகப் பதிவு செய்து, தொடர்ந்து களத்தில் சமூகப் பணியாற்றி வருகிறார். ஒரு மாலைப் பொழுதில் சாதிக்கைச் சந்தித்துப் பேசினோம்.

‘நாங்களும் இருக்கிறோம்’ அமைப்பு

‘நாங்களும் இருக்கிறோம்’ அமைப்பு

“நான் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு இருந்தேன். திருப்பூர்ல வந்து செட்டில் ஆன பிறகு, என்கிட்ட உதவி கேட்பவர்களுக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செஞ்சுட்டு இருந்தேன். என்னால முடியாத சூழல்ல, ஃபேஸ்புக் மூலமா உதவி கேட்டு வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். என்கூட ஐயப்பன் உட்பட சிலரும் இணைஞ்சு உதவிகள் பண்ணிட்டு இருந்தாங்க.

அப்போதான், ஒரு பெண்மணி எங்களைத் தொடர்புகொண்டு, அவங்களோட குழந்தைக்கு இதயப் பிரச்னை இருக்கிறதா சொல்லி உதவி கேட்டாங்க. முதல்ல அவங்களை நேர்ல சந்திச்சுப் பேசுனேன். அவங்களுடைய சூழலை புரிஞ்சுக்கிட்டு, உண்மையிலேயே உதவி தேவைப்படுகிற குடும்பம்தானானு விசாரிச்சோம். தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அந்தப் பெண் குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை உறுதி செஞ்சோம். முதல்ல, அரசாங்க மருத்துவமனை மூலமா சிகிச்சை வழங்க ஏற்பாடு பண்ணினோம். ஆனா, நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு.

கிட்டத்தட்ட நாலு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. நான் காய்கறிக் கடை நடத்திட்டு இருந்தேன். ஐயப்பன் நட்ஸ் கடை நடத்திட்டு இருந்தார். இன்னொரு உறுப்பினர் டெய்லர். நாங்க நாலு லட்சம் ரூபாய்க்கு எங்க போவோம்? ஆனாலும், அந்தக் குழந்தையை காப்பாற்றணும்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்றவர் தொடர்ந்து…

“சமூக வலைதளங்கள்ல உதவிகள் கேட்டோம். ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச தொகையை அனுப்புனாங்க. உண்மையைச் சொல்லணும்னா, அந்தப் பொண்ணுக்காக அஞ்சு ரூபா, பத்து ரூபானு யாசகம் கூட எடுத்திருக்கேன். அப்படி, ஒரு மாசத்துல நாலு லட்சம் ரூபாய் சேகரிச்சோம். அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினோம். சிகிச்சை முடிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் பார்த்தப்போ, அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. உண்மையிலேயே கடவுளைப் பார்த்தாகூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்போமானு தெரியாது. அப்படியொரு சந்தோஷம் எங்களுக்கு. உதவி செய்த எல்லாருக்கும் சமூக வலைதளம் மூலமாவே நன்றி சொன்னேன். எங்களுடைய ஒவ்வொரு பணியையும் பார்த்துட்டு, உதவ வந்தவங்க எங்க குழுவுல ஒருவராக இணைய ஆரம்பிச்சாங்க.

அதன் பிறகு, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுவது, குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது என எங்களுடைய பணிகளை விரிவுபடுத்திக் கிட்டோம். இதுவரைக்கும் 15 குழந்தைகளின் படிப்புக்கு உதவியிருக்கோம். 9 ஆதரவற்ற குடும்பங்களுக்கு எங்களால முடிஞ்ச சின்ன வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கோம்.

4 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கோம். இதுமட்டுமில்லாம, ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுனு எங்களால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைத் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கோம்” என்றவரிடம் `இத்தனை உதவிகளையும் எப்படி ஒருங்கிணைக்கிறார்கள்? உதவி தேவைப்படுபவர்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள்?’ என்று கேட்டோம்.

“பன்னிரண்டு வருஷமா களப்பணியில இருக்கோம். அதனால, உதவி தேவைப்படுறவங்க எங்களைத் தெரிஞ்சவங்க மூலமாவோ, சமூக வலைதளங்கள் மூலமாவோ எங்களை தொடர்புகொள்றாங்க. உதவிகளைப் பெரும்பாலும் நாங்க வெளியில் கேட்பதில்லை. எங்க குழுவுல இருக்கிற 150 பேரே, அவங்களால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுடுவாங்க. உதவி செய்யணும்ங்கிறது யாருக்கும் கட்டாயமில்லை. நிர்பந்தமும் இல்லை. ஆனா, ஒவ்வொருத்தரும் அவங்களால முடிஞ்ச உதவியைச் செய்வாங்க.

சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெரிய காரியங்களைச் செய்யணும்ங்கிற அவசியமில்லை. ஒருத்தருடைய கண்ணீரைத் துடைக்க இன்னொருத்தர் கொஞ்சம் முன்வந்தாலே போதும். அப்படி சின்னச் சின்ன கைகளா இணையும்போது, சமூகத்துக்குப் பெரிய நம்பிக்கை கிடைக்கும். ‘நாங்களும் இருக்கிறோம்’ அமைப்பு, அப்படி ஒரு நம்பிக்கையை உதவி தேவைப் படுறவங்களுக்கு ஏற்படுத்தியிருக்கு. தொடர்ந்து களத்தில் நிற்போம்’’ என்றார் தீர்க்கத்துடன்.

வாடுபவர்களின் வாழ்க்கை மாறட்டும்!

*******

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *