சென்னை:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிலை படுத்தி தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே நடிகர் விஜய் 2026 சட்ட மன்ற தேர்தலை நோக்கி தனது தமிழக வெற்றி கழக கட்சியை கட்டி எழுப்பி வருகிறார். பா.ஜனதா, நாம்தமிழர், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் சட்ட மன்ற தேர்தல் கணக்குகளை இப்போதே போடத்தொடங்கி அதற்கேற்ப காய்களை நகர்த்த தொடங்கி விட்டனர்.
நாங்களும் ரெடி
இதற்கிடையே தி.மு.க. நேற்று முதல் கட்சியாக 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அறிவித்தது.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
அ.தி.மு.க.வும் ரெடி
இந்த நிலையில் அ.தி.மு.க.வும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க.வும் 2026 தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
குழப்பமான நிலை
ஏற்கனவே அ.தி.மு.க.தொண்டர்கள் பிரிந்து கிடக்கும் நிலையில் சசிகலா தற்போது தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். ஓ.பன்னீர் செல்வமும் தனது பங்கிற்கு பேசி வருகிறார்.
இதனால் இன்னும் அ.தி.மு.கவில் குழப்பமான நிலையே நீடித்து வருகிறது. இந்த குழப்பம் தீர்ந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.பலமாக நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தீருமா என்று பார்ப்போம்…..