திமுக 37 தொகுதிகளிலும் அதிமுக 31 தொகுதிகளிலும் மட்டுமே வென்றிருந்தன. ஆட்சியமைத்த எம்.ஜி.ஆர் வழக்கம்போல மத்திய அரசுக்கு இணக்கமான போக்கை கடைபிடித்தார். விளைவு, காங்கிரஸூம் அதிமுகவும் மீண்டும் நெருங்கின. இந்திராவின் இறப்புக்குப் பிறகு ராஜிவ் காந்தியும் அதிமுகவோடு கூட்டணி வைத்தார். 1984 தேர்தலில் 400+ இடங்களை வென்று ராஜிவ் பிரதமராக, தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வர். 73 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 61 தொகுதிகளில் வென்றது.
1987 டிசம்பர் 24 இல் எம்.ஜி.ஆர் இறக்கிறார். அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஜானகி அணியை ஆதரிக்க வேண்டுமென நடிகர் சிவாஜி கணேசன் விரும்புகிறார். ராஜிவ் சிவாஜியின் விருப்பத்தை ஆமோதிக்கவில்லை. ஒன்றுபட்ட அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என்றார். ஜானகியின் ஆட்சி கலைந்து மீண்டும் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை கூட்டணி எதுவுமின்றி தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்தது. திமுக நீண்ட காலமாக ஆட்சியில் இல்லை, அதிமுக பலமிழந்து கிடக்கிறது.

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இதுதான் சரியான நேரமென ராஜிவ் நினைத்தார். மூப்பனார் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டு அவருக்காக 14 முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்தார் ராஜிவ். ஏமாற்றமே மிஞ்சியது. திமுக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 19.8% வாக்குகளுடன் 26 இடங்களில் மட்டுமே வென்றது.
திமுக ஆட்சி கலைக்கப்பட 1991 இல் மீண்டும் தேர்தல். இந்த முறை அதிமுக ஜெ.வின் கட்டுப்பாட்டில் இருந்தது. ராஜிவ் காந்தி அதிமுகவுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி உயிரிழந்தார். ராஜிவ்வின் இறப்புக்கு காரணமே திமுகதான், அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என காங்கிரஸார் கொந்தளித்தனர். ராஜிவ் மீதான அனுதாபம் காங்கிரஸ் – அதிமுக கூட்டணிக்கு பெரு வெற்றியைக் கொடுத்தது. 65 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 இடங்களில் வென்றது.