“திமுக அரசு செய்வது திசை திருப்பும் வேலை!” – ‘மாநில சுயாட்சி’ விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல் | DMK govt is only doing the work of misleading people says Nainar Nagendran alleges

1358232.jpg
Spread the love

மதுரை: “மக்களைத் திசை திருப்பும் வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது” என்று மாநில சுயாட்சி விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் இன்று (ஏப்.15) செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகளை மறைக்க திமுக அரசு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நீட், ஜிஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு முடிந்து போன ஒன்று. அதை இப்போது பேசுகிறார்கள். அடுத்தது மாநில சுயாட்சி. திமுக ஆட்சியில் உள்ள பிரச்சினைகளை மறைக்க, இவற்றை எல்லாம் கையில் எடுக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நஷ்டத்தைப் போக்க மாநில அரசு உரிய மானியங்களை வழங்கி போக்குவரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற திட்டங்களை மாநில அரசு செய்யவில்லை. மக்களை திசைத் திருப்பும் வேலைகளை தான் செய்து வருகிறது. | வாசிக்க > மாநில உரிமைகளை மீட்க ‘உயர் நிலைக் குழு’ ஏன்? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு

மதுரை கல்லூரி விழாவில் தமிழக ஆளுநர் பேசியது சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது. அந்த விழாவில் ஆளுநர் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. ஆளுநரின் பேச்சை பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன். தமிழகத்தில் எதுவும் ஒழுங்காக நடைபெறவில்லை. கிராமங்களில் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அதை செய்ய மாநில அரசு தவறிவிட்டது.

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் வேதனையில் இருப்பதாக நீங்கள் தான் கூறுகிறீர்கள். பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் அதிமுக நிர்வாகி கண்ணீர் வடித்தார் என கூறுவது எனக்கு புதிதாக உள்ளது. பொள்ளாட்சி ஜெயராமனிடம் பேசினேன். அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லை.

நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது. பிரச்சினைக்குரிய இடங்களை போலீஸார் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கட்டுப்படுத்தக் கூடாது. நாட்டில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. பேச்சு சுதந்திரம் மிகப் பெரியது. அதை அடக்குமுறை செய்வது கண்டிக்கத்தக்கது,” என்று அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவரான பிறகு நயினார் நாகேந்திரன் இன்று முதன்முறையாக மதுரை வந்தார். அவரை மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், அவர் நெல்லை புறப்பட்டு சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *