தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் ஆதரவில், இந்தக் கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.
மேலும், இதனை மறைக்க, தவெக எம்.எல்.ஏ சரவணனே அந்த பெண்ணிடம், “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகின்றன.

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்குச் சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?
உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்தக் கொடுமைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?
“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகின்றன என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் பவர்சென்டர்-ஆ?