ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!

Spread the love

ஹலோ வாசகர்களே..!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில நேரங்களில் அவர்களையும், அவர்களைப் பின்பற்றுபவர்களையும் தவறான பாதைக்குக் கொண்டு சென்று விடுகின்றன.

‘Finance with Harish’ சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் பிரபலமான ஹரிஷ், சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘இதில் யார் மீது தவறு’ என்ற கேள்வி ஒரு பக்கம்… ஆனால், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பது பற்றி யோசிப்பது மிகவும் முக்கியம்.

இன்ஃபுளூயன்ஸர் எகானமி என்று ஒரு பிரிவே சமீபத்தில் உருவாகியிருக் கிறது. தினம் தினம் ஏராளம் பேர் இந்தப் பிரிவை நோக்கி வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த இன்ஃபுளூயன்சர்களை முறைப்படுத்தும் நடவடிக்கை களை மத்திய அரசு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அரசின் ஒழுங்கு முறை அமைப்புகள் இன்ஃபுளூயன்சர்களுக்கான வழிகாட்டுதலை தெளிவாக உருவாக்க வேண்டும். இன்ஃபுளூயன்சர்களின் தவறுகளைக் கேள்விக்கு உட்படுத்தலாம், சுட்டிக்காட்டலாம். ஆனால், அதன்மூலம் அவர்களை நெறிப்படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட தாக்குதலாகவும், வெறுப்பு உமிழ்வாகவும் ஆகிவிடக் கூடாது.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தில், சேமிப்பு முதல் மியூச்சுவல் ஃபண்டுகள் வரை நிதி விழிப்புணர்வு இன்னும் ஏராளமான பேருக்குச் சென்று சேர வேண்டியிருக்கிறது. இவற்றை எளிமையாக எடுத்துச் சொல்வதில் ஃபின்ஃபுளூயன்சர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதேசமயம் மக்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு. ஃபின்ஃபுளூயன்சர்ளைப் பின்புலத்தை அலசாமல் அவர்கள் சொல்வதையெல்லாம் நம்பக்கூடாது. மேலும் ஒவ்வொரு தனி நபரின் வருமானம், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றைப் பொறுத்து ஆலோசனைகள் வேறுபடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக, ஒருவரிடம் பணம் கொடுத்து முதலீட்டு ஆலோசனை பெறுவதற்கு முன்பு, அவர் செபி (SEBI) பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் விதிமுறைகள் வேறுபடுகின்றன. அவற்றுக்கு உட்பட்டே அவர்கள் செயல்பட வேண்டும். நிதி சார்ந்த கருத்துகளைப் பகிர்வது என்பது வெறும் பார்வையாளர்களை அதிகரிப்பதற்கான செயலல்ல; அது பலருடைய பணம், எதிர்காலம், குடும்பப் பாதுகாப்பு ஆகியவற்றோடு தொடர்புடையது. இந்தப் பொறுப்பையும் எல்லையையும் ஃபின்ஃபுளூயன்சர்கள் உணர வேண்டும்.

சமூக வலைதளத்தில் விரிந்துகிடக்கும் இந்தப் பொருளாதாரப் பாதையை நெறிப்படுத்துவதில் அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், ஃபின்ஃபுளூயன்சர்கள், மக்கள் என அனைவருக்குமே பங்கு உண்டு. விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *