26 வயதுப் பெண்… கரகரப்பான, ஆண் தன்மையுடன் குரல்…மென்மையாக மாற்ற முடியுமா? | Can a 26-year-old woman with a low, hoarse voice undergo therapy or treatment to soften her tone?

Spread the love

ஹார்மோன் மாற்றங்கள், குரல் நாண்களில் (vocal cords) ஏற்படும் வீக்கம், நெஞ்செரிச்சல் (acid reflux), தைராய்டு கோளாறுகள் மற்றும் குரல் நாண் தடிப்புகள் (vocal cord nodules) ஆகியவை ஒரு பெண்ணின் குரலைப் பாதிக்கலாம். சில நேரங்களில் குரல் நாண்களின் அமைப்பைப் பொறுத்தும் குரல் இயற்கையிலேயே கரகரப்பாக இருக்கலாம்.

எனவே, முதலில் காது-மூக்கு-தொண்டை பிரச்னைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் இ.என்.டி மருத்துவரை அணுகி, உங்கள் குரல் நாண்களைப் பரிசோதித்து குரல் கரகரப்பிற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

எந்தவொரு மருத்துவப் பிரச்னையும் இல்லை என்றால், “வாய்ஸ் தெரபி’ (Voice therapy) உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பேச்சு மற்றும் மொழிப் பயிற்சியாளர் (speech-language pathologist) அல்லது குரல் பயிற்சியாளர், உங்கள் குரலின் தரம், அதிர்வு, குரல் ஸ்ருதி (pitch) மற்றும் குரல் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள். இந்தப் பயிற்சிகள் உங்கள் குரல் நாண்களைப் பாதிக்காமல், இயல்பான  குரலை வளர்த்துக்கொள்ள உதவும்.

 கரகரப்பான குரல் இருப்பதால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கக் கூடாது.

கரகரப்பான குரல் இருப்பதால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கக் கூடாது.

முதலில், கரகரப்பான குரல் இருப்பதால் உங்களிடம் ஏதோ குறைபாடு இருப்பதாக நினைக்கக் கூடாது. சிகிச்சையின் நோக்கம் குரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் மருத்துவப் பிரச்னைகளைச் சரிசெய்வதும்தானே தவிர, ஒரு பெண் இப்படித்தான் பேச வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது அல்ல.

உங்கள் குரலை வலுக்கட்டாயமாக உயர்த்த முயற்சி செய்யாதீர்கள். இது உங்கள் குரல் நாண்களுக்கு அதிக அழுத்தத்தைத் தரும். தொண்டையை எப்போதும் ஈரப்பதத்துடன் (hydrated) வைத்துக்கொள்ளுங்கள், புகைபிடித்தல் மற்றும் தொண்டைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் பிற பழக்கங்களைத் தவிர்க்கவும்.

உங்கள் குரல் கரகரப்பு மூன்று வாரங்களுக்கு மேலாக நீடித்தால், குறிப்பாக, அது புதிதாக வந்திருந்தாலோ அல்லது நாளுக்கு நாள் அதிகமானாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். ஆரம்பத்திலேயே பரிசோதிப்பது சரியான சிகிச்சையைப் பெறவும் சீக்கிரமே குணமாகவும் உதவும். முறையான பரிசோதனை மற்றும் வழிகாட்டுதலுடன், குரலின் தரத்தைப் பாதுகாப்பான முறையில் மேம்படுத்துவது முற்றிலும் சாத்தியமே.

டாக்டர் பிரவீன் பாஸ்கர்:

சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் இ.என்.டி சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் மற்றும் குழந்தைகளுக்கான இ.என்.டி சிகிச்சை சிறப்பு மருத்துவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *