‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’ என்ற வசனத்துடன் ஜெயிலர் 2 முடிகிறது. அதனால், இந்த விமர்சனத்தையும்… ‘போய் தியேட்டரில் படத்தைப் பாருங்க ஜி’ என்றுதான் தொடங்க வேண்டியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலை முதலே முதல் நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால், பல இடங்களில் திரையரங்க வளாகங்கள் திருவிழாக்கோலம் பூண்டன.
அதிகாலை 6 மணிக்கே படத்தின் சிறப்புக் காட்சிகள் தொடங்கின. விடியற்காலையிலேயே திரையரங்குகளில் திரண்ட ரசிகர்கள், ரஜினிகாந்தின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
படம் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிரத் தொடங்கியுள்ளனர். முதல் கட்ட விமர்சனங்கள் பெரும்பாலும் படத்திற்கு சாதகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ‘ஜெயிலர் 2’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் ஜெயிலர் 2, டைகர் முத்துவேல் பாண்டியனின் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது.
கோவை தடாகம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன். முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் பின்னணியில் இன்னும் சில பெரிய ஆட்டக்காரர்கள் இருப்பது தெரிந்தாலும், அவர்களை ஜெயிலர் கண்டுபிடிக்கவில்லை. அந்தக் குறையை இந்தப் பாகத்தில் சரி செய்கிறார்.
வர்மனைக் கொன்றது யார்? அவர்களைத் தேடி வர்மனின் கூட்டாளிகள் புறப்படுகிறார்கள். அதே நேரத்தில், அவர்களைத் தேடி ஜெயிலரும் களமிறங்குகிறார். இந்த இரண்டு தேடல்களும் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றன, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ஜெயிலர் 2வின் மையக் கதை.
முதல் பாதி… முழுக்க அதகளம்!
படத்தின் முதல் பாதி நெல்சனின் வழக்கமான நகைச்சுவை டிராக்கில் பட்டையைக் கிளப்புகிறது. குறிப்பாக, மூர்த்தி கதாபாத்திரம் செம கலாட்டா. யோகி பாபு, பியோர்ன் சுர்ராவ் ஆகியோரும் காமெடிக்கு கை கொடுக்கிறார்கள். குறிப்பாக செஸ் விளையாட்டை வைத்து மூர்த்தி செய்யும் காமெடி காட்சிக்கு தியேட்டரில் சிரிப்பலை அடங்கவே இல்லை. சூரஜ் தனது உடல்மொழியால் முதல் பாதியில் கவனம் ஈர்க்கிறார். ஜாலியாக நகரும் முதல் பாதி, ரசிகர்களுக்குத் தேவையான மாஸ் தருணத்துடன் முடிகிறது.
இடைவேளைக்கு முன்பு இடம்பெறும் அந்தப் பாடலை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. ஆமாம்… அந்தப் பாடல்தான்! ஆனால், எத்தனை டெக்கேடுகள் கடந்தாலும் ரஜினி… ரஜினிதான்!
பெரிய சண்டைக்காட்சிகள் எதுவும் இல்லாமலேயே மாஸ் எலிவேஷனை உருவாக்குவது சாதாரண விஷயமல்ல. ரஜினியின் ஆராவே பல இடங்களில் அந்த வேலையைச் செய்துவிடுகிறது. அதேபோல் காமெடியிலும் தனது டைமிங்கால் அசத்துகிறார். அனிருத் பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன? ரஜினி படத்துக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அதைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் வேறு பாதை!
இரண்டாம் பாதியில் கதை வேறு தளத்துக்கு நகர்கிறது. முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இது ஜெயிலர் முதல் பாகத்தின் டெம்ப்ளேட்டுக்கு நெருக்கமாக இருப்பது போலத் தெரிகிறது. மாஸ் காட்சிகள் குறைவில்லை. ஆனால், எமோஷன்ஸ் பகுதியில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
குறிப்பாக, மகனைக் கொன்ற தந்தை என்ற உண்மை வெளியாகும் தருணங்களில் எதிர்பார்த்த அளவுக்கு எமோஷன் ஒர்க் ஆகவில்லை. அந்த இடங்களில் காட்சிகளுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. ஆனால், ரஜினி வரும் காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
பர்த்டே பார்ட்டியில் ரஜினி காட்டும் மாஸ் ஆகட்டும்… வித்யா பாலனிடம் அவர் போடும் நக்கல் ஆகட்டும்… ஒவ்வொரு இடத்திலும் ‘தலைவர்’ ஸ்டைல் தெறிக்கிறது.
வித்யா பாலன்… இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம்!
வித்யா பாலனின் கதாபாத்திரம் கதைக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. அவருக்கு இன்னும் கூடுதல் காட்சிகள் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அவரது கதாபாத்திரத்தை வைத்து நெல்சன் இன்னும் பெரிய விஷயத்தை வைத்திருக்கிறார் என்ற உணர்வும் வருகிறது.
குறிப்பாக, மூன்றாம் பாகத்துக்கான ஒரு முக்கியமான கேரக்டராக வித்யா பாலனைப் பயன்படுத்த நெல்சன் திட்டமிட்டிருக்கிறாரோ என்ற எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்துகிறது. அப்படி இருந்தால் அது நிச்சயம் நல்ல முயற்சிதான்.
கேமியோக்கள்… அதே மாஸ்!
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இந்தப் பாகத்திலும் கேமியோவாக வந்து தங்களுக்கான வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். ஜெயிலருக்கு எப்போது யார் கை கொடுப்பார்கள் என்பது தெரிந்திருந்தாலும், அவர்கள் வரும் தருணங்கள் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாகவே அமைந்திருக்கின்றன. குறிப்பாக, படத்தின் கடைசி ஃப்ரேம்… ‘ஃப்ரேம் ஆஹ் பாருங்க ஜி’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
எஸ்.ஜே. சூர்யா எப்படி?
எஸ்.ஜே. சூர்யா தனது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால், ரஜினியின் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சிகளில் மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கான காட்சிகளில் ஒரே மாதிரியான ட்ரீட்மென்ட் மீண்டும் மீண்டும் வருவதும் ஒரு கட்டத்தில் தெரிகிறது.
அதேபோல், ரஜினி கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் சரிவைச் சந்திக்கும்போது அவரை மீட்க வரும் புதிய பாலிவுட் கதாபாத்திரமும் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்தக் கதைக்குள் கொஞ்சம் துருத்தலாகத் தெரிகிறது.
தொழில்நுட்பத்தில் மாஸ்!
கதை, காமெடி, மாஸ் என ஒருபுறம் சென்றாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படக்குழு அதிகமாக உழைத்திருக்கிறது. கேமரா, கலை இயக்கம் என காட்சிக்குக் காட்சி மெனக்கெடல் தெரிகிறது. பிரமாண்டமான காட்சிகளுக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.மொத்தத்தில்…
மொத்தத்தில்…
ஜெயிலர் 2வின் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது ஒரு மாஸ் எண்டர்டெயினர்.

