விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சக்திவேல்’ சீரியல் சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது நினைவிருக்கலாம்.
2023ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியலின் முதல் சீசன் கடந்தாண்டு முடிவடைந்தது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே தொடரின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது சீசன் தொடங்கிய சில மாதங்களுக்குள்ளேயே, தற்போது சீரியல் முடிவடைந்துள்ளது.
இது குறித்து சீரியல் தொடர்புடைய ஏரியாவில் சிலரிடம் விசாரித்தோம்.
”முதல் சீசன்ல இருந்தே அஞ்சலி பாஸ்கர் சீரியல்ல ஹீரோயினா நடிச்சுட்டு வர்றாங்க. அவங்க தமிழ் சீரியலுக்கு வந்த நேரமா தெரியலை, அவங்க சொந்த ஊரான மலையாளத்துல அவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு. அதனால முதல் சீசன் முடிஞ்சப்பவே அவங்களுக்கு அங்க கிடைச்ச வாய்ப்புகளைச் சொல்லி, அங்க கமிட் ஆகப் போறதா சொல்றாங்கன்னு பேச்சு அடிபட்டது.
ஆனா இடையில என்ன நடந்திச்சோ தெரியல. இரண்டாவது சீசன்ல ஹீரோ மாறினப்பக்கூட ஹீரோயினா இவங்களே தொடந்தாங்க.
தொடங்கி சில மாசங்களே ஆன நிலையில, திரும்பவும் தனக்கு மலையாளத்துல கிடைச்ச வாய்ப்புகளைச் சொல்லியே, இந்த சீரியல்ல இருந்து தன்னை விடுவிக்கக் கேட்டதா தெரியுது.
தயாரிப்பு தரப்புல இருந்து எவ்வளவோ பேசிப் பார்த்தும், அவங்க வெளியேறணுங்கிற முடிவுல உறுதியா இருந்ததா சொன்னாங்க.
ரெண்டாவது சீசன்ல ஹீரோவும் மாறியிருந்த சூழல்ல… ஹீரோயினாவது அதே ஆர்ட்டிஸ்ட் தொடர்ந்தா நல்லாருக்கும்னு நினைச்சது தயாரிப்பு தரப்பு. ஆனா இவங்க அடம் பிடிச்சு வெளியேறிட்டதால திரும்பவும் வேற ஹீரோயினை கமிட் செய்து சீரியலைத் தொடர வேண்டாங்கிற முடிவை எடுத்து தொடரை முடிச்சிட்டாங்க. இவங்க ஒரு ஆள் அடம் பிடிச்சு வெளியில போனதால் பல ஆர்ட்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு போயிடுச்சு” என்கிறார்கள் அவர்கள்.