சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ அலுவலகத்தில் தவெகவின் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர்களுக்கு சில முக்கிய அசைன்மெண்டுகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை 11 மணியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு இந்த கூட்டம் நடந்திருக்கிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கக்கூடிய முக்கியமான 20 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதம் முடிந்திருக்கும் நிலையில், ஊடகங்களிலும் வலைதளங்களிலும் இன்னும் வலுவாக தவெகவின் தடத்தை பதித்து நரேட்டிவ்களை செட் செய்ய வேண்டும் எனப் பேசப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர், ‘நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில் திமுக வலுவாக சிக்கியிருக்கிறது. அரசும் அந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. எனவே அந்த விவகாரம் நீர்த்துப் போய் விடாதபடிக்கு ஊடகங்களில் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள் எனக் கூறப்பட்டது.

மேலும், திமுக தினமும் பரந்தாமன் மூலம் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அவரது விமர்சனங்களையும் சமரசமில்லாமல் அடித்து ஆடி பதில் சொல்லுங்கள் எனக் கூறினர். செய்தித் தொடர்பாளர்களான நாங்கள் எங்களின் தரப்பு கருத்துகளையும் அமைச்சரிடம் முன்னெடுத்து வைத்தோம். அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நாங்கள் இருக்கையில், தவெக ஆதரவாளர் எனக் கூறிக் கொண்டு சிலர் விவாதங்களில் முகம் காட்டுகின்றனர். அவர்கள் மொக்கையான வாதங்களால் நம்முடைய தரப்பை பலவீனப்படுத்துகின்றன. அப்படியானவர்கள் நம்முடைய கட்சிப் பெயரை பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமெனக் கூறினோம். சீனியர்களான வைகைச்செல்வன், சி.மகேந்திரன் போன்றோர் பிரச்னைகள், அதற்கான பதிலடிகள் என்று மட்டுமில்லாமல் நம்முடைய ஊடக செயல்பாடுகள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டுமெனக் கூறினர்’ என்றனர்.
பரந்தாமனின் விமர்சனங்களுக்கு இறங்கி பதிலடி கொடுங்கள், லைப்ரரி விவகாரத்தை விட்டு விடாதீர்கள் என்பதே செய்தித் தொடர்பாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் என்கின்றனர்.
கடைசியாக அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ‘விவாதங்களில் யாரையும் கண்ணியக்குறைவாக பேசிவிடாதீர்கள். தளபதி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்’ என லேசாக எச்சரித்து தீபாவளியே முடிந்த பிறகு பலகாரப் பெட்டி கொடுத்து அனுப்பியிருக்கிறார்.