தேனி: சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை: போதை இளைஞர்கள் வெறிச்செயல்!| Theni Sub-Inspector Killed by Drunk Youths

Spread the love

தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு ஆய்வாளராக செந்தில்குமார் (55 வயது) பணியாற்றி வந்தார். நேற்றைய தினம் தீபாவளி என்பதால் பணி முடித்துவிட்டு இரவு பத்து முப்பது மணிக்கு சம தர்மபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

அப்போது சம தர்மபுரம் மெயின் பஜாரில் மது போதையில் சில இளைஞர்கள் நடுரோட்டில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை வெடித்து அதனை ரீல்ஸ்களாக எடுத்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்கள். இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரிடம் முறையிட்டனர்.

செந்தில்குமார்

செந்தில்குமார்

இதனை தொடர்ந்து செந்தில்குமார் போதையில் வெடி வெடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் “ஏம்பா இப்படி நடுரோட்டில் வைத்து வெடிக்கிறதா டைம் முடிஞ்சு போச்சு சத்தம் போடாம ஒழுங்கா வீட்டுக்கு போங்க” எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த மது போதை இளைஞர்கள் “அப்படியெல்லாம் போக முடியாது நீங்க சொன்னா போணுமா… அப்படித்தான் வெடிப்போம்” எனக் கூறி மீண்டும் பட்டாசுகளை வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனை சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அனைவரும், சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரை சூழ்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.

செந்தில்குமார்

செந்தில்குமார்

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பாதியிலே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட காவல்துறை விசாரித்த போது கெளதம் , மகேஷ்வரன், மற்றும் பிரனோஸ் ஆகியோரை கைது செய்தது மட்டுமல்லாமல் மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களும் 25 -வயதிற்கு உட்பட்டவர்கள். மேலும் மது போதைக்கு ஆளாகி பணியில் இருந்த ஒரு போலீசையே அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு நடந்திருக்கும் சம்பவம், தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *