அணுசக்தி சூப்பர் பவர் ஆகும் இந்தியா.. ஆஸ்திரேலியாவுடன் டீலிங்.. பார்சல் அனுப்பப்படும் யுரேனியம்! | India Australia nuclear energy: This massive deal will help India to become atomic super power

Spread the love

International

oi-Shyamsundar I

சிட்னி: ஆஸ்திரேலியாவுடன் மிகப்பெரிய அணு சக்தி ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு நாட்டு உறவில் மட்டுமன்றி இந்தியாவின் அணு சக்தி ஆற்றலிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் இந்திய அணுசக்தித் துறையின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க யுரேனியம் விநியோக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகியுள்ளது.

India Australia nuclear energy

உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், மற்ற அணு ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தவும் வகை செய்யும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியா யுரேனியம்

உலகில் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த யுரேனியம் வளத்தில் சுமார் 28 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியா தனது நாட்டில் அணுமின் நிலையங்களையோ அல்லது அணு ஆயுதங்களையோ பயன்படுத்துவதில்லை. தங்களது யுரேனியம் முழுவதையும் அவர்கள் ஏற்றுமதி மட்டுமே செய்து வருகின்றனர்.

140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் சுமார் 6 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில் மின்சார திட்டங்களை வகுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசு 100 கிகாவாட் அணுமின் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா தனது அணுசக்தி உற்பத்தியை இருமடங்காக உயர்த்தியிருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் அது வெறும் 3 சதவீதமே வகிக்கிறது. அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் இறக்குமதியில் இருந்த உலகளாவிய சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்தியா யுரேனியம் இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவியது.

தற்போது ஆஸ்திரேலியா உடனான இந்த ஒப்பந்தம் அந்தப் பற்றாக்குறையைப் போக்கவுள்ளது.

இனி எல்லாம் மாறும்

ஏற்கனவே அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது. இந்தச் சட்டம் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளை மட்டுமே அணுஆயுத நாடுகளாக அங்கீகரிக்கிறது.

இதில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியம் விற்க ஆஸ்திரேலியா நீண்ட காலமாக மறுத்து வந்தது. 1967 ஜனவரிக்கு முன்பாக அணு ஆயுதச் சோதனை நடத்திய நாடுகளை மட்டுமே இந்தச் சட்டம் அங்கீகரிப்பதால், இது ஒருதலைப்பட்சமானது என்று கூறி இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.

இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையை 1974-லும், பின்னர் 1998-லும் நடத்தியதால் சர்வதேசத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால், 2008ல் அமெரிக்காவின் முயற்சியால் அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சிறப்பு விலக்கு அளித்தது. அதனைத் தொடர்ந்து கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஆஸ்திரேலியாவுடனும் கடந்த 2015லேயே கொள்கை அளவிலான அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டாலும்.. பல்வேறு சட்ட சிக்கல்களால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

யுரேனியம் மட்டுமன்றி, இரு நாடுகளும் ராணுவம், விண்வெளி ஆகிய துறைகளிலும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற இதில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ‘கோகோஸ் கீலிங்’ தீவுகளில் இந்தியாவின் விண்வெளிப் பயணங்களுக்கு பயன்படுத்தும் விதமாக ஒரு தற்காலிக விண்வெளி கண்காணிப்பு முனையத்தை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இது இந்தியாவின் ககன்யான் போன்ற எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்குப் பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *