அகதி விஞ்ஞானிகளின் வருகையினால் வேலைவாய்ப்புகள் மிகவும் அரிதாகிவிட்ட நிலையில், ஸ்டாக்ஹோமில் உள்ள மேன் சீக்பான் நிறுவனத்தில் (Manne Siegbahn Institute) இணைந்த மெய்ட்னர், பெர்லினில் தான் பழகியிருந்த பணிச்சூழல் இல்லை என்பதை உணர்ந்தார். ஸ்டாக்ஹோமில் பணியாற்றியபோது தன் சகோதரருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், தான் உணர்ந்த தனிமையையும், ஆய்வு உபகரணங்களைப் பெறுவதில் தான் எதிர்கொண்ட சிரமங்களையும் அவர் கூறியிருந்தார்.
பெர்லினில் மெயிட்னர் தொடங்கிய பணியை ஹானும் ஃபிரிட்ஸ் ஸ்ட்ராஸ்மேனும் தொடர்ந்தனர். டிசம்பர் 1938-ல், யுரேனியம் நியூட்ரான்களால் தாக்கப்படும்போது பேரியம் உருவாவதை கண்டறிந்த அவர்கள் எதிர்பாராத, தங்களால் விளக்க முடியாத அந்த நிகழ்வு குறித்து உடனடியாக மெய்ட்னருக்கு கடிதம் எழுதினர்.

ஸ்வீடனில் தனது தனது ஆய்வினை தொடர முடியாத மெயிட்னர் தனது மருமகனான ஓட்டோ ஃபிரிஷுடன் இணைந்து ஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மேனின் குழப்பமான கண்டுபிடிப்புகளுக்கு ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கத்தை ஒரு ஆய்வு கட்டுரையாக 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டனர்.
“நியூட்ரான் தாக்குதலின் கீழ் யுரேனியம் மற்றும் தோரியத்தின் சிதைவுப் பொருட்கள்” என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரை யுரேனியம் அணுக்கரு எவ்வாறு இரண்டாகப் பிளவுபட்டது என்பதை விளக்கும் ஒரு கட்டமைப்பு கோட்பாட்டை விளக்கியது. இந்தக் கட்டுரை அணு இயற்பியலை மாற்றி அமைக்க போகும் “பிளவு” (fission) என்ற சொல்லை உருவாக்கியது.
தொடர்ந்து பெர்லினில் நடைபெற்ற இது சம்பந்தப்பட்ட ஆய்வுகளிலும், இந்த ஆய்வுகளுக்கான விமர்சனங்களிலும் மெயிட்னரின் பங்கு அங்கீகரிக்கப்படாமலேயே போனது. ஸ்ட்ராஸ்மேன் மெயிட்னரை “எங்கள் குழுவின் அறிவுசார் தலைவர்” என்று குறிப்பிட்டபோதிலும், 1944-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு ஹானுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பலமுறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும், மெயிட்னரின் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படாமலேயே இருந்தன.
ஓட்டோ ஃபிரிஷ் மற்றும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து அணுகுண்டு தயாரிக்கும் திட்டமான “மன்ஹாட்டனில்” சேர லீஸ் மெயிட்னர் 1943-ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார். ஸ்வீடனை விட்டு வெளியேறி நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அவரது பங்களிப்பை மதிக்கும் அறிவியல் சமூகத்துடன் ஒன்றிணையும் வாய்ப்பை லீஸ் மெயிட்னர் உறுதியாக நிராகரித்தார்.
முதலாம் உலகப் போரின்போது செவிலியராகப் பணியாற்றிய மெய்ட்னர், தன்னையும், தனது இயற்பியல் அறிவையும் போர் இயந்திரங்களின் சேவைக்காக அர்ப்பணிக்க இயலாது என்றும் “குண்டுகளை உருவாக்கும் பணியில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை!” என்றும் உறுதியாக கூறினார்.