சடுகுடு பாட்டும்… ஜில் நினைவுகளும்: பாரதிபுரத்தை அதிரவைத்த பனிமலர் கபடிக்குழு!

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

80’களுக்கு  முன்பு இருந்து‌  நடந்து வந்த ஒரு ஆரோக்கியமான அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக ஊருக்கே பெருமை தரக்கூடியதாக ஒவ்வொரு வருடமும் நடந்து வந்த ஒரு நிகழ்வு நின்று விட்டது. அதை‌  நடத்தி வந்தவர்களுக்கும் வீரத்துடன் பாடி வந்தவர்களுக்கும் வருத்தத்தைத் தந்ததோ இல்லையோ கூடி நின்று வேலைக்கு விடுப்பு எடுத்து(காட்டு வேலை முதல் கவர்ன்மென்ட் வேலை ‌வரை அனைவரும்) வேடிக்கை பார்த்தது விளையாட்டு உற்சாகத்தில் ரசிகர்களாக மட்டுமின்றி ஆட்டக்காரர்களாகவே தங்களைப் பாவித்துக் கொண்டவர்களுக்கு இந்த நிறுத்தம் மிகப்பெரிய ஏமாற்றமே.

கோவையில்  சிறு கிராமத்தில்தான் பனிமலர் கபடிக்குழு உதயமாகி இருந்தது. பேர்தான் பனிமலர் கபடிக்குழு உண்மையிலேயே அது ஒரு எரிமலை கபடிக்குழு ஆகும். 

பாரதிபுரத்து இளவட்டக்கூட்டம்  தினமும் மாலை நேரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடுவார்கள்.எல்லா நண்பர்களும் வரும்வரை ஜாலியாக அரட்டை அடிப்பார்கள். எல்லாரும் கூடிய பிறகு மளமளவென்று வேலைகள் ஆரம்பிப்பார்கள். சுண்ணாம்பு மாவில் கோடு கிழிப்பது எங்கள் வீட்டிலிருந்து   குடிநீர் வாங்கிக்கொண்டு செல்வது பார்வையாளர்களாக மாலை நேரத்தில் மரத்தடி பெஞ்சில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்   ஊர்ப்  பெரியவர்களை அழைத்து வருவது போன்ற  வேலைகளை  பிரித்து ஆளுக்கு ஒன்றாக அனுசரித்து செய்வார்கள்.

பின்னர் களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தார்கள் என்றால் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களால் வரையறுக்கப்பட்ட நேரம் வரை விளையாட்டு தொடரும்.பள்ளி வழியாக செல்வோரும்  இதைப் பார்த்தாலும் கண்டு கொள்ளாமல் தான் செல்வார்கள்.பள்ளி சிறுவர்களும்  பெரியவர்களும்  சிறிது  நேரம் நின்றுபார்ப்பார்கள்.

இது தினசரி நடைமுறையாகும்…..                   

       கல்லூரிக்கு செல்வோர் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக் கல்வி முடிந்தவுடன் பணிக்கு செல்வோர்  சில புது மாப்பிள்ளைகள் என கலவையான கூட்டணி அது. தண்ணீர் பற்றாக்குறை இருந்த அந்தக் காலகட்டத்தில் போர் வெல் பைப்பில்  அம்மா தண்ணீர் அடித்து தரச் சொன்னால்  ‘போம்மா மூச்சு வாங்கும்’ என நழுவும் இளைஞர்கள் கபடி மைதானத்தில்    ஒன்று கூடி மணிக்கணக்கில் மூச்சு அடக்கி விளையாடுவதை பார்த்து அவர்களின் அம்மாக்கள் திட்டித்தீர்ப்பார்கள்..ஆனாலும் மனதிற்குள் பெருமைப்பட்டு கொள்வார்கள்.எப்போதும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவது எங்கள் மரத்தடி பெஞ்ச்  பெரு மன்னர்கள் தான். 

மாவட்ட  அளவிலான  கபடி போட்டிகளுக்கான தேதிகள் முடிவு ஆனதும்  இளைஞர்கள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். உள்ளூர் முக்கியப் புள்ளிகளின் துணையுடன் விழா நடத்தத் தேவையான நன்கொடை வசூலிக்கப்படும்.சும்மா சொல்லக்கூடாது எல்லோருமே தாராளமாக நன்கொடை தருவார்கள். வீட்டு ஆண்கள் கொடுக்கும் நன்கொடை போக தாய்மார்கள் தங்கள் சிறுவாட்டுப் பணத்தையும் (மசாலா பெட்டி சேமிப்பு) குழந்தைகள் தங்கள் உண்டியல் காசையும் கூட சந்தோஷமாக  தருவார்கள்.         

 விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே மிகவும் முனைப்புடன் செயல் படுவார்கள்.ஊர்மக்களின் ஒத்துழைப்பும் பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலும் முழுமையாகவும் முறையாகவும் கிடைக்கும். கோயில் திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற விழாக்களை விட கபடிப் போட்டி விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   

         போட்டிகள் தொடங்கும் நாளில் இருந்து அந்த   கபடி மைதானம் கொண்டிருக்கும் விழாக்கோலம் ஊருக்கே உற்சாகத்தையும் சந்தோஷத்தையும்  பெருமளவில் தந்து வந்தது.மாவட்ட அளவிலான போட்டிகள் என்பதால் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நிறையப் போட்டி அணிகள் வரும். 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் மைதானத்தில் தான். வெளியூர்களிலிருந்து சொந்தங்களை அழைக்கும் நிகழ்வுகள்  கூட நடக்கும்.பின்னே இது ஊரின் கௌரவம் அல்லவா.!பாரதிபுரத்தின்  கொண்டாட்ட களம் இல்லையா !

கலந்து கொள்ளும் அணிகளின் பதிவிலிருந்து   அணிகளின் உறுப்பினர்கள்     அறிமுகம்     வரை   ஒலிபெருக்கியில் அறிவிக்கும் போதே எதிர்பார்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் அங்கு  துவங்கிவிடும்…

விளையாட்டு நிகழ்ச்சிகளை மேடையில் எங்கள் ஊர் தம்பிகள் வர்ணிக்கும் அழகின் முன் ஐ.பி.எல் ரன்னிங் கமென்ட்ரி எல்லாம்ஓரங்கட்டி நிற்க வேண்டும். அத்துணை சிறப்பாக  இருக்கும்..ரசிக்கும் படி இருக்கும்..

          வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் எடுத்தவர்கள் எங்க ஊர் கபடிப் போட்டிகளை முதலில் பார்த்திருந்தால் அந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    இதோ.,   எதிர்பார்த்த விளையாட்டு ஆரம்பித்துவிட்டது . விசில் சத்தம் தூள் பறக்குது. ஆரவாரப்பறை ஒலி காதைக் கிழிக்குது.. 

      அங்கு வேடிக்கை பார்ப்போரின் கால்களும் கைகளும் ஏன் வாய்களும் கூட ஒரு நிலையில் இல்லை. இதில் வயது வேறுபாடோ ஆண் பெண் வேறுபாடோ இல்லை. எல்லோரிடமும்‌ விளையாட்டு ஆர்வமும்  பரபரப்பும் மிகுந்திருக்கும்.     

       ‘தம்பி சைடுலே பார்த்துப் போ, பின்னாலே ஆள் வருது , எப்படியாவது ஒருத்தனை ஆவது தொட்டுட்டு வா , சூப்பர்டா மூணு பேர் அவுட் ‘என்ற ஆண்களின் குரல்களும்’,டேய் பார்த்து ஆடுங்கடா ,அடிபடாம காயமாகாம ஆடுங்கடா கண்ணுகளா ‘ என்ற தாய்மார்கள் குரலும் , யாரையும் தொடாமல் திரும்பி வந்தால் ‘ச்சை என்னண்ணா  இப்படி பண்ணிட்டிங்களேண்ணா’ என்கிற பொடுசுகளின் கூச்சலும் அங்கே கலந்து ஒலிக்கும்….       

         ஜெயித்து விட்டால் ஊர் முழுக்க கொண்டாட்டம் ,கும்மாளம்,கூத்து தான்.பரிசுத்தொகை பத்தாயிரம் ரூபாய்  அல்லவா.அத்துடன் பெருமையை ஊருக்கு அளிக்கும்‌ ‌‌கேடயமும் கிடைக்கும்.

       கபடி வீரர்களை‌ ஊர் மொத்தமும் தூக்கி வைத்து கொண்டாடும்.ஒரு வாரத்துக்கு  எல்லார் வாயும் கபடி கபடி கவசம் தான் சொல்லும். நாக்கு கூட சடுகுடு  என்று தான் சத்தம் போடும்.’வெற்றி கிட்டாக் கனி  ஆகிவிட்டால் பெரியவர்கள் ஆறுதல் கூடுதலாகவே இருக்கும்…

‘வருத்தப்படாதீங்கப்பா! அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.நம்ம ஊருக்கு வந்து கபடி சிறப்பா ஆடுனவங்களுக்கு விட்டுக் குடுத்ததா நினைச்சுட்டு அடுத்த சோலியப் போய் பாருங்கப்பா’என்பார்கள்.சிறியவர்கள் ‘அண்ணா விடுங்கண்ணா நெக்ஸ்ட் மேட்ச் ‌நம்ம தான்ஜெயிக்கிறோம்.

நாங்களும் வந்துருவோமல்ல ,don’t worry  be hapy’ என்பார்கள் …

        வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்று ஒருவருக்கு ஒருவர் தேற்றிக் கொண்டு வழக்கமான வேலைக்கும் திரும்பி விடுவார்கள். வேறு ஊர்களுக்கும் சென்று விளையாடி பரிசுகள் வாங்கி மகிழ்ந்தநாட்கள் நிறையவே உண்டு. 

          மனதுக்கு நிறைவு தரும் ஆனந்தத் தருணங்கள்அவை.

ஆனால் நிறைவும்  ஆனந்தமும் நிலைக்கவில்லை.

      குடும்பசுமை கூடக்கூட பனிமலர் கபடிக் குழுவில்  பனி உருகி வடிந்து விட்டது.மலர் வாடி உதிர்ந்து விட்டது.இளைய தலைமுறை யாரும் இதை முன்னெடுத்து‌ செய்யவில்லை. இண்டோர்கேம்ஸ்,வீடியோகேம்ஸ்,

வேறு விளையாட்டுகள்,வெளியூர் என்று மாறிவிட்டார்கள்.கபடி மைதானம்  வீரர்களின் கால் உரசல் இல்லாமல்  புல் மண்டிப் போயுள்ளது..

மாலை  நேரங்களில்   தினம் தவறாது ஒலிக்கும்  அந்த  கபடி  பாட்டுகளின்

ஓசை  தேய்ந்தே  மறைந்து விட்டது..

       இதேபோல் பழமையான விளையாட்டுகளான கில்லி, கோலி,  நொண்டி ,ஒண்டிவில், பல்லாங்குழி பாண்டி , தாயம், பரமபதம் கண்ணாமூச்சி பதினஞ்சாம்கரம்  பண்ணாங்கல் எல்லாம் மறையத்தொடங்கி விட்டன. 

     காலக் கதியடியோ என்று கை விரித்துப் புலம்புவதை விடுத்து பழமையின் பெருமைகளை மீட்டெடுக்க முயல்வோம். தொலைந்து போன தொன்மையான பழைய விளையாட்டுகளில் வாழ்க்கைப் பாடங்கள் பொதிந்து கிடப்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு  உணர்த்திடுவோம்.     

       அரிய நினைவுகளை முன் கொணர்ந்த  பழைய கருப்பு வெள்ளை பனிமலர் கபடிக்குழு புகைப்படத்துக்கு  நன்றி!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *