கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பச்சடி கிராமத்தில், ரெஜி (54), அவரது தம்பி சஜி (43) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய் மேரி (71) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். வழக்கமாக வீட்டு வேலைகளையும், விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்லும் பணிகளை ரெஜியே கவனித்து வந்தார். ஆனால், ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு ரெஜியைக் காணவில்லை. அவருக்குப் பதிலாக சஜி அந்த வேலைகளைச் செய்வதைக் கண்ட உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் ரெஜியின் சகோதரி சினிக்கும், போலீஸாருக்கும் தகவல் அளித்தார்.
இதற்கிடையில், ஏப்ரல் 9-ம் தேதி கேரளச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சஜி மட்டும் தனியாக வந்து வாக்களித்துள்ளார். அப்போது உடலில் கட்டுகளுடன் வந்த அவர், கழிவறையில் விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். தனது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சகோதரி சினிவிடம் பொய் கூறி நம்ப வைக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீஸார், பொன்னூட்டில் குடும்பத்தின் கொல்லைப்புறத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பயன்படுத்தப்படாத சாணக் குழியில் ரெஜி மற்றும் மேரியின் சிதைந்த உடல்கள் தளர்வான மண்ணால் மூடப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டன. அந்த இடத்திற்கு யாரும் வராமல் இருக்க, அங்கு ஒரு ஆக்ரோஷமான நாயைச் சஜி கட்டிப்போட்டிருந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சஜி, பின்னர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் சஜி அளித்த வாக்குமூலத்தின்படி, தங்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தைப் பிரிப்பதில் சகோதரர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்துள்ளது. மேலும், சஜியின் திருமண முயற்சிகளுக்கு அண்ணன் ரெஜி முட்டுக்கட்டையாக இருந்ததாகவும், சஜிக்குக் குழந்தை பிறப்பதில் உள்ள சிக்கல்களைச் சொல்லி ரெஜி கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சஜி, மது போதையில் அண்ணனை மூச்சுத்திணறச் செய்தும், தாயைச் சுவரில் மோதியும் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைகள் ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதேப் போல கடந்த 2018-ம் ஆண்டு, இவர்களது தந்தை மேத்யூ திடீரென மாயமானார். இது குறித்து அப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது நடந்துள்ள இரட்டைக் கொலைகளின் பாணியைப் பார்க்கும்போது, தந்தையின் மறைவிலும் சஜிக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
நேரடிச் சாட்சிகள் இல்லாத இந்த வழக்கில், தடயவியல் நிபுணர்களின் ஆய்வுகள் மற்றும் சூழ்நிலைச் சான்றுகளையே போலீஸார் பெரிதும் நம்பியுள்ளனர். கைதான சஜியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக இடுக்கி மாவட்ட எஸ்பி சாபு மேத்யூ தெரிவித்துள்ளார். அமைதியான மலைக்கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.