கொல்கத்தா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சி?திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்!

Spread the love

கொல்கத்தாவில் பதிவான வாக்குகள் அங்குள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அதில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து ஏதோ செய்து கொண்டிருந்தனர். அதோடு பா.ஜ.கவினர் ஜனநாயக படுகொலையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் வாக்குப்பதிவு தொடங்கும் வரை தொண்டர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சசி பாஞ்சா மற்றும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் ஆகியோர் கட்சி தொண்டர்களுடன் அங்கு வந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர்.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் ஆட்கள்

தங்களது கட்சியின் பிரதிநிதி இல்லாமல் எப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறைக்குள் ஆட்கள் நுழையலாம் என்று அங்கிருந்த அதிகாரிகளிடமும், போலீஸாரிடம் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து கேள்விப்பட்டதும் கொல்கத்தா வடக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்மிதா பாண்டே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அனைத்து அறைகளும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு உள்ளதாக இரண்டு திரிணாமுல் மூத்த தலைவர்களுக்கு உறுதியளித்தார். சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும், தபால் வாக்குகளைப் பிரித்துக் கொண்டிருந்த தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று அவர் கூறினார்.

மேலும், தபால் வாக்குகள் பிரிக்கப்படுவது குறித்து கட்சிப் பிரதிநிதிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிகள் வெளியே ஒளிபரப்பப்படும் என்றும் பாண்டே உறுதியளித்தார்.

அந்தப் பரபரப்பு இன்னும் முழுமையாக அடங்கும் முன்பு திரிணாமுல் கட்சியினரை தொடர்ந்து பாஜக வேட்பாளர்களான தபஸ் ராய் மற்றும் சந்தோஷ் பதக் ஆகியோரும் அங்கு வந்தடைந்தனர். “அவர்கள் இங்கு கூடினால், நாங்களும் காவலுக்கு நிற்போம்,” என்று அவர்கள் கூறினர். இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது இதனால், மத்திய ஆயுதக் காவல் படையினர் தலையிட்டு அவர்களைப் பிரித்துவிட வேண்டியதாயிற்று. மாவட்டத் தேர்தல் அதிகாரி பாண்டே மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், போட்டியிடும் வேட்பாளர்களை அருகருகே அமரவைத்து, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாஜகவின் மூத்த தலைவர் தபஸ் ராய் முற்றிலுமாக நிராகரித்தார். சம்பவ இடத்திற்கு அந்திருந்த தபஸ் ராய் இது குறித்து கூறுகையில்,”இவையெல்லாம் வெறும் வதந்திகளே. அவர்கள் அச்சத்தில் இருப்பதால், ஒருவித பயச் சூழலை உருவாக்கவே திரிணாமுல் காங்கிரஸ் தற்போது இவற்றைப் பரப்பி வருகிறது. நானும் இங்குள்ள பாதுகாப்பு அறையை ஆய்வு செய்யவே வந்துள்ளேன். திரிணாமுல் காங்கிரஸ் பொய்களைப் பரப்பி வருகிறது,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவங்களை தொடர்ந்து மாநில தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் அகர்வால் பத்திரிகையாளர்களை கூட்டி குற்றச்சாட்டுகளை மறுத்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மூன்று அடுக்கு பாதுகாப்பால் சூழப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *