தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக ‘அண்ணன் சீர்’ திட்டம் இடம்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களின் திருமணத்தின்போது 8 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயன்பெற விரும்பும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆதார் அட்டை கட்டாயம்… அரசு அறிவுறுத்தல்
அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களது ஆதார் எண்ணுக்கான சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள், இதுவரை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.
அருகில் ஆதார் பதிவு மையங்கள் இல்லாததால் பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் ஆதார் பதிவு முகாம்களை அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாவிட்டால் மாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.
ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பிறகும் எண் ஒதுக்கப்படாத நிலையில், விண்ணப்பதாரர்கள் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக ஆதார் பதிவு அடையாளச் சீட்டுடன், கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம்:
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம்
- பான் கார்டு
- குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
- வாக்காளர் அடையாள அட்டை
- 100 நாள் வேலை உறுதித் திட்ட அட்டை
- புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம்
- ஓட்டுநர் உரிமம்
- அரசு அதிகாரி அல்லது வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாளச் சான்றிதழ்
- புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை
இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைரேகை அங்கீகாரம் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
கைரேகையின் தரம் குறைவாக இருப்பதால் ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்ய முடியாத சூழலில், கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த முறைகளிலும் அங்கீகாரம் பெற முடியாவிட்டால், ஆதார் கடிதத்தில் உள்ள க்யூஆர் (QR) குறியீட்டைச் சரிபார்த்து திட்டத்தின் பலன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்தால், மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆதார் பதிவு அல்லது அங்கீகாரத்தில் சிக்கல் உள்ள பெண்களும் உரிய மாற்று நடைமுறைகள் வாயிலாகத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

