திருவண்ணாமலையில் `திருக்கார்த்திகை தீபத்திருவிழா’ இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கடந்த 3 தினங்களாக காவல் தெய்வங்களுக்கான வழிபாடுகள் நடந்துவந்த நிலையில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து, 63 அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்தில், விடியற்காலை 6.05 மணிக்குமேல் 7.35 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளி அருள்பாலித்தனர். இந்த மங்களகரமான கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு `அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று விண்ணதிர முழங்கி, மனமுருகி வேண்டிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தனர். இன்று இரவு சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருகிறார்கள். நாளைக் காலையில் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், நாளை இரவு வெள்ளி இந்திர வாகனத்திலும் பவனி நடக்கிறது.

இப்படியே, அடுத்த 10 நாள்களுக்கும் தீபப் பெருவிழா களைகட்டும். 24-ம் தேதி நடைபெறும் பத்தாம் நாள் திருவிழா மிக முக்கியமானது. அன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் பின்புறத்தில் உள்ள 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து ரூ.39 லட்சத்துக்கு முதல் தரத்திலான 4,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக நெய் காணிக்கை தொகையை ரொக்கமாக செலுத்தவும், நேரடியாக நெய்யாகச் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. மகா தீபத்தைத் தரிசித்தபடி கிரிவலம் வந்தால், கோடி பலன்கள் கிடைக்கும்; இப்பிறவியிலான அனைத்துப் பாவங்களும் நீங்கி, புண்ணிய பலனைப் பெறுவார்கள் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு, மகா தீபத்தைத் தரிசிக்க சுமார் 40 லட்சம் முதல் 50 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.