அண்ணா ஹசாரே போராட்டம் முதல் டெல்லி தேர்தல் தோல்வி வரை: ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியும் பின்னடைவும்! | Key Lessons from Aam Aadmi Party Decade in Power

Spread the love

அரசியல் கட்சியாக மாற்றம்

போராட்டத்தைத் தொடர்வதா, தேர்தல் அரசியலில் இறங்குவதா என்ற கேள்வி இயக்கத்துக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. ஊழல் எதிர்ப்பு இயக்கம் கட்சிகளுக்கு வெளியே தொடர வேண்டும் என்பது ஹசாரேவின் நிலைப்பாடு. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால்தான் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கருதினர். இந்த வேறுபாட்டைத் தொடர்ந்து, 2012 நவம்பர் 26-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது.

2016: ஆரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு சம்பவம்

2016: ஆரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீச்சு சம்பவம்

மணீஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், குமார் விஸ்வாஸ், ஷாஜியா இல்மி, ஆனந்த் குமார், சஞ்சய் சிங், கோபால் ராய் உள்ளிட்டோர் கட்சியின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர். பங்கஜ் குப்தா உள்ளிட்டோர் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டனர். அண்ணா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்ட இயக்கத்தின் முக்கிய முகங்கள் கட்சியின் தேர்தல் அரசியலில் இணையவில்லை. ‘சாதாரண மனிதன்’ என்ற பொருளைக் கொண்ட பெயருடன் களமிறங்கிய கட்சி, சிறு நன்கொடைகள், வெளிப்படையான அரசியல் நிதி, ஊழல் எதிர்ப்பு, பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை முன்னிறுத்தியது.

இந்த இயக்கத்தின் தனித்துவம், அரசியல் கட்சிகளின் வழக்கமான உறுப்பினர் அமைப்புக்கு மாறாக தன்னார்வலர்கள் மற்றும் சிறு நன்கொடையாளர்களை முன்னிறுத்தியதில் இருந்தது. சமூக ஊடகங்களையும் நேரடி மக்கள் சந்திப்புகளையும் பயன்படுத்தி நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், குடிமைச் சமூகத்தினர் மத்தியில் ஆதரவைத் திரட்டியது. இந்த அணுகுமுறை தொடக்கத்தில் கட்சிக்கு தனி அடையாளத்தை உருவாக்க உதவியது. இந்த அமைப்பு முறை, கட்சியின் தொடக்ககால அரசியல் அடையாளத்தை மற்ற கட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இதுவே அதன் தனித்துவம்.

2013 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 28 இடங்களையும், 29 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் ஆம் ஆத்மி பெற்றது. மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தது குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்தது.

பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் வெளியில் இருந்து அளித்த ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை அமைந்தார். ஆனால், ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததைத் தொடர்ந்து, 49 நாள்களிலேயே 2014 பிப்ரவரியில் அரசு ராஜிநாமா செய்தது. இதை ஆதரவாளர்கள் கொள்கைக்காக எடுத்த முடிவாகக் கூறினர்; விமர்சகர்கள் ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஏற்காத முடிவாகக் கேள்வி எழுப்பினர்.

2014 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, நான்கு இடங்களில் மட்டுமே வென்றது. அந்த நான்கும் பஞ்சாபில் கிடைத்தன. டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. தேசிய அளவில் விரிவடையும் முயற்சிக்கு இந்த முடிவு பின்னடைவாக இருந்தாலும், பஞ்சாபில் கட்சிக்கு அரசியல் தளத்தை உருவாக்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *