விநாயகரை ஆனைமுகத்தானாவே பெரும்பாலும் வணங்குகிறோம். சில தலங்களில் விநாயகர் மனித ரூபத்திலும் அருள்கிறார். ஆனால் அவரே லிங்க ரூபனாக அருளும் தலம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது தீவனூர். திருவண்ணாமலைக்குப் போகும் மார்க்கத்தில் உள்ளதால் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளது. இந்தத் தலத்தில்தான் விநாயகர் லிங்கரூபனாக அருள்கிறார்.
விழுது விடாத அதிசய ஆலமரத்தின் அடியில் இருந்து அருள்பாலிக்கும் இந்த அற்புத விநாயகருக்கு, “பொய்யாமொழி பிள்ளையார்’ என்றும் பெயர் உண்டு. இவரை, ‘நெல் குத்தித் தந்த விநாயகர்’ என்றும் சொல்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் முருகப்பன் என்னும் வணிகர் 100 பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில்காரர்கள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், ‘‘மூட்டையில் உள்ளது அத்தனையும் உளுந்து; என்னிடம் மிளகு இல்லையே’’ என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஊருக்குச் சென்றதும் மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாக மாறியதாம். அந்த மிளகு முழுமையையும் விற்பனை செய்து அந்தப் பணத்தில் வணிகர் ஆலமரத்தடி விநாயகருக்குக் கோயில் எழுப்பி, பொய்யாமொழி விநாயகர் என்ற பதிகமும் பாடினார் என்கிறது தலவரலாறு.