தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
அதனைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். பின்னர், மன்னிப்புக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகளை மீண்டும் வழங்கவில்லை. இதுவே எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு நபர்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்தார் எடப்பாடி.

தலைமை நிலைய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த எஸ்.பி. வேலுமணியைக் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராகவும், மாவட்ட செயலாளராக இருந்த தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், அதேபோல் மற்றொரு மாவட்ட செயலாளரான எம்.ஆர். விஜயபாஸ்கருக்குக் கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும் கட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சி.வி. சண்முகத்திற்குத் தற்போது வரை பொறுப்புகள் ஒதுக்கப்படவில்லை.