கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார். அப்போது பேசிய அவர், ”த.வெ.க அரசு கையாளாகாத அரசு. துளி முதலீடுகளை ஈர்க்கக்கூடிய சக்தி கூட இல்லை. மற்றவர்கள் மீது பழி சொல்லி தப்பிக்க பார்க்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. இதில் நாம் என்ன கருத்து சொல்ல முடியும்? இனி இறுதி தீர்ப்பு வந்தவுடன் தான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கிறது, இதை சரி, தவறு என எப்படி சொல்ல முடியும்?
கடந்த ஆறு மாத காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இந்த அரசு சரியாக செயல்படவில்லை. தமிழகத்தின் பல எதிர்க்கட்சிகள் இதுகுறித்து பேசியும், முதல்வர் வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. போதைப் பொருள், பாலியல், சட்டம் ஒழுங்கு குறித்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு போதைப் பொருளைக் கட்டுப்படுத்த வேண்டும். போதை ஆசாமிகளால் தான் பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை நடைபெறுகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.
த.வெ.க முழுமையான அமைப்பாகவே இல்லை. ஜாக்பாட் அடித்தது போன்று, பம்பர் பரிசு போல ஆட்சிக்கு வந்து விட்டனர். மக்கள் பிரச்சனையும் தெரியவில்லை, அரசு எப்படி நடத்த வேண்டும் என தெரியவில்லை, நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை. கள்ளக்குறிச்சி எம்.எ.ல்ஏ மட்டுமல்ல ராணிப்பேட்டையில் உள்ள அமைச்சர் காவல் நிலையத்திற்கு சென்று பெண் காவலரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்கின்றார். அந்த அதிகாரத்தை யார் தந்தது? அடாவடித்தனமான ஒரு அரசாங்கத்தை பார்க்கிறோம். ஈரோட்டில் ஒரு அமைச்சர் நள்ளிரவில் பைலை எடுத்துக்கொண்டு வரும்படி பெண் காவல் கண்காணிப்பாளரை அழைக்கின்றார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு இது நடக்கிறது. இந்த ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கின்றது?
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டார். இனி தேர்தல் வரும் நேரத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்கின்றோம். கொளத்தூரில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முதல்வர் கரூரில் இறந்தவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டும், இல்லையெனில் நேரடியாக சென்று ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். யாரும் செய்ய முடியாத ஒரு காரியமாக… துக்கத்தில் இருப்பவர்களை சென்னைக்கு அழைத்து துக்கம் விசாரித்த ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய் மட்டும்தான்.

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை கர்நாடக அரசிடம் கேட்டு இந்த அரசு பெறவில்லை. சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்காக டெல்லி சென்ற முதல்வர் ஜோசப் விஜய் கர்நாடக முதல்வரிடம் இதுகுறித்து பேசவில்லை. அவர் தமிழக மக்கள், விவசாயிகளைப் பற்றி கவலைப்படவில்லை. அதிமுகவில் 41 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம். இதை வைத்துக்கொண்டு நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? மக்களுக்கு இந்த ஆட்சி மீது ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்.யாரும் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. செங்கோட்டையன், வேலுமணி ஆகியோர் சந்தித்துக் கொண்டது பற்றி உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்” என்றார்.
அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு, “சசிகலா அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். அவரை அந்த கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். இன்னொருவர் கட்சி ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கின்றார்” எனத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றாரே என்ற கேள்விக்கு, ”அ.தி.மு.க-வில் இரண்டு கோடி தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி. இதில் தனி எல்லாம் கிடையாது. இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒரு நபர்தான் வேலுமணி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஊடகத்தில் இதை கேட்காதீர்கள்” என பதில் அளித்தார்.