“அதிமுக குளம் வற்றுகிறது… கொக்குக்கு என்ன வேலை?” – செம்மலை அதிரடி பேட்டி! – Kumudam

Spread the love

அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்கு இடப்பெயர்ச்சி ஆகிவருபவர்களில் சமீபத்திய வரவு மாஜி அமைச்சர் செம்மலை. வடக்கு மண்டல அ.தி.மு.க. சீனியர் முகமான இவரிடம் த.வெ.க. தலைமை சில பல ‘அசைன்மென்ட்களை’ கொடுத்திருப்பதாக தகவல் கசியும் நேரத்தில், அவரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

அரசியலில் ஒதுங்கியிருந்த நீங்கள் திடீரென த.வெ.க.வில் இணைந்தது ஏன்?

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருடனும் பயணித்தவன் நான். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. என் உழைப்பு வீணாவதாக எண்ணினேன். வேறு வழியின்றி மாற்றுப் பாதையை தேடிக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக முதல்வர் விஜய் எம்.ஜி.ஆரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டதுதான் தவெகவில் நான் இணைய முக்கிய காரணம்.”

கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் எல்லோருமே இப்படி, ‘அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்று சொல்வது சுயநலமில்லையா?

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், கட்சியில் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவன் நான். அ.தி.மு.க.வில் தற்போதைய தலைமையின் செயல்பாடுகள் சரியில்லை. அதனால்தான் இம்முடிவுக்கு வரவேண்டியிருந்ததே தவிர, எதையும் எதிர்பார்த்து தவெ.கவுக்குச் செல்லவில்லை.”

‘ஊழலற்ற ஆட்சி’ என்கிறீர்கள். ஆனால் மின் கொள்முதல், அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்டவற்றில் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே?

“கதை அளப்பவர்கள் அளந்துகொண்டிருப்பார்கள். வழக்கறிஞர் நியமனத்தில் பதவி கிடைக்காதவர்கள் இப்படி கதை கட்டுகிறார்கள். எதுவும் ஆதாரப்பூர்வமானது இல்லை. பிரதமர் மோடி முன்னிலையிலேயே ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்கிறோம்’ என்று நெஞ்சுரத்தோடு சொல்லியவர் முதல்வர் விஜய். ஆண்ட இரு கட்சிகளாலும் இப்படிச் சொல்ல முடியுமா?” 

மின் துறை உள்ளிட்ட பல துறைகளில் தனியார்மயம் கொண்டுவரப்படுகிறதே?

“சில விஷயங்களை அரசே செய்ய முடியாமல், தனியாரிடம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் சொல்லிவிட்டார். இது ஒன்றும் தவெக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல, தி.மு.க ஆட்சியின் திட்டம் அதிலுள்ள குறைபாடுகளைக் களைந்து இந்த அரசு செயல்படுத்துகிறது. மின் இழப்பையும், மின் திருட்டையும் தடுப்பதற்குத்தான் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்.

விஜய்யின் முகத்தைக் காட்டினாலே ஓட்டு விழும்’ என்ற நிலை இந்த இடைத்தேர்தலில் உடைந்துவிட்டது என்கிற விமர்சனம் குறித்து…

“முதல்வர் களத்தில் இறங்கி தேர்தல் பிரசாரம் செய்ததில் தவறில்லையே. பொதுத்தேர்தலில் விஜய் பிரசாரம் செய்ய அப்போதைய தி.மு.க. ஆட்சி தடை போட்டதால் தான் வெறும் 13 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தார். ‘ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு ஊருக்கும் நேரடியாக வருவேன்’ என்று அப்போதே அவர் சொல்லிவிட்டார்.”

எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைத்து, த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக விமர்சனம் வருகிறதே?

“ஒரு எம்.எல்.ஏ. தனது கட்சியின் செயல்பாடு, தலைமை பிடிக்காமல் இருந்தால் என்ன செய்வது?’ அதிமுக என்ற கட்சியை திமுக எதிர்ப்பு என்கிற புள்ளியிலிருந்துதான் எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஆனால், சேரக்கூடாத இரு சக்திகளும் எப்படியாவது விஜய் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்று பேரம் பேசின. இது எம்.எல்.ஏக்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்து, பிடித்த கட்சியில் சேர்ந்ததில் தவறில்லை.”

அழித்துவிட்டு இன்னொரு கட்சியை ஒரு கட்சியை வளர்க்க வேண்டுமா?

“அப்படியல்ல. அ.தி.மு.க. தலைமையின் போக்கு பிடிக்காமல் மாற்றுப் பாதையைத் தேடும்போது தவெக தான் சிறந்த கட்சியாகத் தோன்றுகிறது. அழிவை தானாக அதிமுக தலைமைத் தேடிக்கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதிமுக என்கிற குளம் வற்றிக்கொண்டிருக்கிறது. குளம் வற்றினால் கொக்குக்கு என்ன வேலை? த.வெ.க. அ.தி.மு.க வேறுவேறல்ல, இரண்டும் ஒன்று தான். அதிமுக எந்த கொள்கையில் தொடங்கப்பட்டதோ அக்கொள்கையை நிறைவேற்றுகிற கட்சியாக தவெ.க உள்ளது”

பல ஊழல் வழக்குகளை வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு எப்படி தூய்மையான ஆட்சியைக் கொடுப்பார் விஜய்?

“விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர்மீது வழக்குகள் இருக்கின்றன. ஆனால், எந்த வழக்கிலும் தீர்ப்பளிக்கப்படவில்லை. அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே, குற்றவாளி அல்ல அப்படி குற்றவாளியாக மக்கள் கருதினால் எப்படி வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்? மக்கள் ஏற்றுக்கொண்டவர்களை, கட்சி ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தலைமை அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்”

இனியாவது அ.தி.மு.க. கரை சேர என்ன செய்ய வேண்டும்?

“அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைவதாகவும், அ.தி.மு.க. தலைமையை மாற்ற டெல்லி பாஜக திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரை இது காலம் கடந்த செயல், டி.டி.விதினகரன் உள்ளிட்டோர் மீண்டும் சேர்ந்தால் மட்டும் என்னவாகிவிடப்போகிறது?”

சசிகலா அரசியலுக்கு முழுக்குப் போடப்போகிறாராமே?

“பாவம் தான். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி, அவருக்கே துரோகம் செய்தால் அவரால் என்ன செய்ய முடியும்?

சசிகலாவையும் த.வெ.க.வில் இணைய அழைப்பீர்களா?

“யாரைச் சேர்க்க வேண்டுமென்பதை தலைமைதான் முடிவு செய்யும். வருபவர்களை எல்லாம் சேர்க்க முடியாது. என்னை இணைக்கும் போதுகூட என் பின்புலம், மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை எல்லாம் பார்த்துதான் சேர்த்தனர். தேவையில்லாத வேஸ்ட் லக்கேஜ்களை கட்சியில் சேர்த்துக்கொண்டு என்ன செய்வது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *