தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை…சர்வதேச அளவில் தடம் பதித்த இரும்புப் பெண்மணி! – Kumudam

Spread the love

அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசைப் பெறும் முதல் தமிழ்ப் பெண்மணி நவநீதம் பிள்ளை.

சர்வதேச சட்டம் மேம்பாடு மற்றும் உலக அமைதியை நிலை நாட்ட மேற்கொண்ட கடின முயற்சிகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

யார் இந்த நவநீதம் பிள்ளை?

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தமிழ் வம்சாவளி குடும்பத்தில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் நவநீதம் பிள்ளை. இவரது தந்தை பேருந்து ஓட்டுநர். செல்லமாக நவி பிள்ளை என்று அழைக்கப்படும் நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவின் நடால் பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும் (LLB) பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் (Master of Law) சட்ட அறிவியலில் முனைவர் பட்டமும் (Doctorate of Juridical Science) படித்து தேறியவர்.

படிப்பை முடித்த பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பி 1965-ல் கபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள்.
தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில், வெள்ளையர் அல்லாத முதல் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்று சாதனை படைத்தவர், நவி பிள்ளை. மனித உரிமைகள், இனவெறி, பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறைக் கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களில் சட்டப் போராட்டங்கள் நடத்தி, சர்வதேச சட்ட வரலாற்றில் மிக முக்கியமான அம்சங்களைச் சேர்க்கச் செய்தவர், இந்த இரும்பு பெண்மணி.

ருவாண்டா இனப்படுகொலை

ருவாண்டா இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICTR) நவநீதம் பிள்ளையின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ருவாண்டாவில் 1998ஆம் ஆண்டில் ஜீன் பால் அகாயேசு என்பவர், தபா மாகாணத்தின் மேயராக இருந்தபோது, துட்சி (Tutsi) இன மக்களுக்கு எதிராக பயங்கர புரட்சியும் இனப்படுகொலைகளும் நடந்தேறின.

அவற்றை அகாயேசு தடுக்காமல், மேலும் வன்முறை வெடிக்கத் தூண்டுகோலாக இருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அகாயேசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு சர்வதேச சட்டத்தில் வரலாறு படைத்தது.

ஐ.நா.சபையின் இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஒரு சர்வதேச நீதிமன்றத்தால் ‘இனப்படுகொலை’ (Genocide) என்ற குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட முதல் நபர் ஜீன் பால் அகாயேசு ஆவார். மேலும், பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் இனப்படுகொலையின் ஓர் அங்கம்தான் என்ற புதிய சட்டப்பார்வை சர்வதேச அளவில் ஏற்படவும் இந்தத் தீர்ப்பு வழிவகுத்தது. அகாயேசுவுக்கு 1998-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் மாலி நாட்டில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

ரோபன் தீவில் நெல்சன் மண்டேலா

தென்னாப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ரோபன் தீவு (Robben Island) சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நவநீதம் பிள்ளை சட்டப்போராட்டங்களை நடத்தினார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு நடக்கும் சித்ரவதைகளை நீதிமன்றங்கள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்த விவகாரங்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. நவநீதம் பிள்ளையின் போராட்டத்துக்கு வெற்றியும் கிடைத்தது.

‘ஈக்வாலிட்டி நவ்’

தற்போது 85 வயதாகும் நவநீதம் பிள்ளை, ‘ஈக்வாலிடி நவ்’ என்ற சர்வதேச மகளிர் உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். உலகளவில் குழந்தைகள், கைதிகள், குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட பெண்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியோரின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்பு இது.

சரி… நோபல் பரிசு கிடைத்தது பற்றி நவநீதம் பிள்ளையின் கருத்து?! 

“நார்வே தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அவரை எடுக்கும்படி யாராவது சொல்லுங்களேன். அவருக்கு பரிசு கிடைத்த விஷயத்தை சொல்லலாம் என்றால், எங்களால் இன்னும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை” என்று ஜாலியாக அலுத்துக் கொண்டார் நோபல் கமிட்டித் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னெஸ்.

இப்போது இந்தத் தகவல் பிள்ளைக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புவோம். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் தமிழ்ப் பெண்மணி என்பதில் நம் எல்லோருக்கும் பெருமைதானே!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *