தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
மறுபுறம், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சிக்கான தேவையான இடங்களைப் பெற முடியாததால், சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் வாய்ப்பையும் அக்கட்சி இழந்தது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அதிமுகவில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு தரப்பும், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான மற்றொரு தரப்பும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இதனால் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா,மரகத குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அதிமுகவிலிருந்து வைகைச் செல்வனும் விலகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவின் எடப்பாடியாருக்கும் சிவி சண்முகத்துக்கும் மோதல் போக்கில் உள்ளதால் தற்போது எடப்பாடியார் சிவி சண்முகத்துக்கு எதிராக அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.
இரு பிரிவினாராக பிரிந்திருந்த போது இடையில் எஸ் பி வேலுமணி அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடியரை சந்தித்து மீண்டும் இணைந்தார். ஆனால் சி.வி சண்முகம் தற்போது வரையும் எடப்பாடியாரை சந்திக்காமல் இருப்பது அதிமுகவினர் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை அதிமுகவிலிருந்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். புதிய மாவட்ட செயலாளர்களுக்கும் பசுபதி சி.வி சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளான ஆனந்தி வெங்கடேசன் ஜெயப்பிரகாஷ், பாஸ்கரன்,எழில்ராஜன், விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகளை எடப்பாடி பொறுப்பிலிருந்து நீக்கியது சிவி சண்முகம் தரப்பினர் மத்தியில் மிகுந்து கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவில் நீடிப்பதா, தவெகவில் சேர்வதா என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சி.வி.சண்முகம் வீட்டுக்கு தவெக கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


