
பல ஆண்டுகள் உருண்டோடியும் அவர் எதிர்பார்த்த பம்பர் பரிசு எதுவும் விழவில்லை. தினமும் ஆயிரக்கணக்கில் ரூபாய் லாட்டரி வாங்க செலவு செய்ததால் நிதி நிலைமை தலைகீழாக மாறியது. வருமானம் போதாமல் கடன் பெருகிய நிலையில், வாங்கிய கடனை அடைக்கவும் மீண்டும் லாட்டரி சீட்டுகளை வாங்கவும் தனது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை சிறுக சிறுக விற்றுத் தீர்த்தார். ஒருகட்டத்தில் கடன் சுமை கழுத்தை நெரிக்கவே, மனைவி சாந்தாவின் நகைகளையும் அடகு வைத்து இழந்தார்.
ஒரு காலத்தில் நிலச்சுவான்தாராகப் பெருமையுடன் வாழ்ந்த ராகவன், லாட்டரி மீதான போதையால் அனைத்தையும் இழந்து, தற்போது எஞ்சியிருக்கும் 25 சென்ட் நிலத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் மனைவியுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வயது மூப்பின் காரணமாக உடல்தளர்ந்து வெளியூர் பயணங்கள் நின்றாலும், அவரது லாட்டரி மோகம் முற்றிலும் தணியவில்லை.
கடந்த 60 ஆண்டுகளில் தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளில் ஒன்றைக் கூட அவர் தூக்கி எறியவில்லை. தன் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் நினைவூட்டும் ஆவணங்களாக அவற்றை வீட்டில் பத்திரமாகச் சேர்த்து வைத்துள்ளார். சமீபத்தில் அந்த பழைய டிக்கெட்டுகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டியபோது, அவை 5 பெரிய சாக்கு மூட்டைகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. அந்த சீட்டுகளின் அன்றைய மற்றும் இன்றைய பண மதிப்பைத் தோராயமாகக் கணக்கிட்டுப் பார்த்தபோது, சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை லாட்டரிக்காக மட்டுமே அவரது கையை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பி.பி. ராகவன் கூறுகையில், “விவசாயம் செய்து நல்லபடியாகத்தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், கேரள அரசு முதல் லாட்டரி வெளியிடுவதற்கு முன்பிருந்தே பூட்டான் லாட்டரி வாங்கும் பழக்கம் எனக்குத் தொற்றிக்கொண்டது. அன்றிலிருந்து தினமும் காஞ்ஞங்காடு, பையன்னூர் என அலைந்து திரிந்து லாட்டரி வாங்கினேன். ஒரு நாள் ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை டிக்கெட் வாங்கிய நாட்களும் உண்டு. எப்போதாவது சில ஆயிரம் ரூபாய் பரிசு விழும். அதுவே அடுத்த முறை பெரிய பம்பர் அடித்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துவிடும். அந்த ஒரே ஒரு நப்பாசையில் சொந்தமாக இருந்த இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தையும் விற்றேன். கடனை அடைக்க என் மனைவியின் கழுத்து நகைகளையும் இழக்க நேரிட்டது. எப்படியாவது அதிஷ்ட தேவதை நம்மை ஒருநாள் வாழ வைத்துவிடுவாள் என்று நம்பினேன்.
. ஆனால் கடைசிவரை அது நடக்கவே இல்லை. இவ்வளவு பணத்தை லாட்டரிக்காக மட்டுமே செலவளித்த என்னைப்போல ஒரு ஆள் வேறு யாரும் இருக்க முடியாது. இன்று நான் இழப்புகளால் உருவான ‘இரண்டு கோடியின் துரதிர்ஷ்டசாலி'” என்றார்.