அதில் இப்போது ஹாட் டாபிக்… சிவி சண்முகம்!
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. குறிப்பாக, வன்னியர் வாக்குகள் முக்கியமானதாகக் கருதப்படும் தொகுதியில் சி.வி. சண்முகம் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரசாரப் பட்டியலில் இல்லாதது அதிமுகவுக்குள்ளேயே பேசுபொருளானது.
அதுதான் இப்போது அடுத்த கேள்வியை கிளப்பியிருக்கிறது. அதாவது, அதிமுகவுக்காக களமிறக்கப்படாதவர்… அப்படியானால் யாருக்காக களமிறங்குகிறார்? என்ற கேள்வியுடன், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தரப்பினர் மறைமுகமாக வேலை பார்க்கிறார்களா என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் உலா வருவதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, வன்னியர் வாக்குகளை தவெக பக்கம் திருப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் மரகதம் குமரவேல் தரப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தலைக்காட்டாத எஸ்.பி.வேலுமணி..!
இதற்கிடையில் இன்னொரு பெயரும் அடிக்கடி அடிபடுகிறது.. எஸ்.பி.வேலுமணி. தாராபுரம் தொகுதியில் நான்கு வார்டுகளுக்கான பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டிருக்கிறார். பொறுப்பு கொடுத்தாச்சு, ஆனால் களத்தில் ஆளைப் பார்க்க முடியவில்லை என்கிற ரீதியில் அதிமுகவுக்குள் பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, “நான்கு வார்டு பொறுப்பு… ஆனால் தொகுதி பக்கமே இன்னும் தலைகாட்டவில்லை!” என்ற விமர்சனமும் கட்சிக்குள் உலா வருவதாகக் கூறப்படுகிறது.
ஒருபக்கம் மதுராந்தகத்தில் சி.வி.சண்முகத்துக்கு முக்கிய களப்பணி இல்லை. இன்னொரு பக்கம் தாராபுரத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு பொறுப்பு இருந்தும் களப்பணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இதையெல்லாம் சேர்த்து பார்த்தால், இடைத்தேர்தல் என்பது வெறும் திமுக vs அதிமுக vs தவெக போட்டியாக மட்டும் தெரியவில்லை. அதிமுகவுக்குள்ளேயே யார் யார் எந்தப் பக்கம் நிற்கிறார்கள்? என்ற கேள்வியும் சேர்ந்து ஓடுகிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு வெற்றி, தோல்வி கணக்குகள் ஒருபக்கம் இருக்கட்டும், “யார் வேலை பார்த்தார்கள்? யார் வேலை பார்க்கவில்லை? யார் யாருக்கு வேலை பார்த்தார்கள்?”என்ற கணக்கும் அதிமுகவுக்குள் போடப்படலாம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
இதற்கிடையில் தவெக வேட்பாளரான மரகதம் குமரவேல், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவரே என்பதால், மதுராந்தகம் களத்தில் பழைய கணக்குகளும் புதிய கூட்டணிக் கணக்குகளும் மோதுகின்றன.
ஆக, எடப்பாடிக்கு எதிரான கோபம்… தவெக மீது அனுதாபமா? சிவிஎஸ் அமைதியாக இருக்கிறாரா அல்லது ஆட்டம் காட்டுகிறாரா? எஸ்.பி.வேலுமணி தலைக்காட்டாதது ஏன்? மதுராந்தகம் தேர்தல் முடிந்த பிறகுதான் இந்தக் கேள்விகளுக்கான பதில் தெளிவாகும்.
அதுவரை, “சிவிஎஸ் & எஸ்.பி.வி… சைலண்ட் மிஷனா?” என்ற அரசியல் முனுமுனுப்பு மட்டும் ஓயப்போவதில்லை.

