“அதெப்படி, கோயில் வழக்கு என்றால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடமே வருகிறது?" – சிபிஎம் சண்முகம் கேள்வி

Spread the love

தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபமேற்றும் இடத்தில் தீபமேற்றப்பட்டு நிறைவடைந்தது. ஆனாலும், தொடர்ந்து தர்கா அருகில் இருக்கும் தூண் மீது தீபமேற்றவேண்டும் என பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம்வரை சென்றது. இந்த நிலையில், சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் நேற்று, “மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் லட்சுமண ரேகையை தாண்டி விட்டார். மாண்புமிகு‌ தலைமை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்.” என தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவரின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்வைத்து ஒரு கலவரத்தை மூட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் தொடர்ச்சியாகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். கடந்த ஆண்டு முதல்தான் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை ஒரு பெரிய பிரச்னையாக மாற்றி, அதனை நாடு தழுவிய விவகாரமாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஏதோ இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்குச் சான்றாக, இந்த ஆண்டைப் போலவே கடந்த ஆண்டும் நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாக ஒரு கடுமையான சிக்கலை அவர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது இருந்த திமுக தலைமையிலான அரசு, நீதிமன்றம் மாறுபட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தபோதிலும், பக்தர்களின் உணர்வுகளுக்கு ஏற்பவும் மக்களின் உணர்வுகளை மதித்தும், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படுகிற உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு மேலே இருக்கக்கூடிய மண்டபத்திலேயே அந்தத் தீபத்தை ஏற்றிச் சுமுகமாக முடித்து வைத்தது.

சிபிஎம் சண்முகம்
சிபிஎம் சண்முகம்

அதைப் போலவே, கடந்த ஆண்டு வழக்கின் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தவறான தீர்ப்பை அளித்தது. அங்கே இருக்கக்கூடிய அளவைக் கல்லுக்கு ‘தீபத்தூண்’ என்று புதிய பெயரைச் சூட்டி, அதிலே இந்த ஒரு முறை மட்டும் தீபத்தை ஏற்ற வேண்டும் என்கிற தீர்ப்பை அவர்கள் வழங்கினார்கள்.

தொல்லியல் துறையினர் ‘அது அளவைக் கல் தான், தீபத்தூண் அல்ல’ என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர். ஆனால், எதற்காக உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஓர் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்பது ஒரு பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏனெனில், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படுகிற இடம், அந்தக் கோயிலின் ஆகம விதிகள் மற்றும் அங்கே இருக்கக்கூடிய அறங்காவலர் குழு ஆகியவையே பல நூறு ஆண்டுகளாகத் தீபம் ஏற்றுகிற பணியை நிறைவேற்றி வருகின்றன.

ஆகவே, முழுமையான உரிமை அவர்களுக்குத்தான் இருக்கிறது. அறங்காவலர் குழுவோடு சம்பந்தமில்லாமல் யாரோ சிலர் வழக்கு தொடுக்கிறார்கள் என்பதற்காக, நீதிமன்றம் இது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது மிகத் தவறானது. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி ஆகம விதிகளும், பழக்கவழக்கங்களும், மரபுகளும் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தூண்

திருப்பரங்குன்றம் தீபத்தைப் பொறுத்தவரை, உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு மேலே இருக்கக்கூடிய மண்டபத்தில் ஏற்றுவதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதைத்தான் இப்போதும் தமிழ்நாடு அரசாங்கம் மக்களுடைய உணர்வுகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளித்து நேற்றைய தினம் நிறைவேற்றி இருக்கிறது.

அந்த வகையில், இப்போது இருக்கக்கூடிய தவெக ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், நேற்றைய தினம் தானாக முன்வந்து யாரோ ஒருவர் வழக்கு தொடுத்து, அதைத் தான்தான் விசாரிப்பேன் என்கிற முறையில் மாண்புமிகு நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னால் மீண்டும் தீபம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது தமிழ்நாட்டு மக்கள் அறிந்ததே.

ஒரே விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் மீண்டும் ஒரே நீதிபதியிடமே விசாரணைக்கு எப்படி வருகிறது என்பதற்கான விளக்கத்தைத் தலைமை நீதிபதி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நான் மிக்க பணிவோடு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அது எப்படி ஜி.ஆர்.சுவாமிநாதன் மட்டும்தான் நீதிபதியா? திரும்பத் திரும்ப கோயில் சம்பந்தமான விவகாரங்கள் அல்லது தீபம் தொடர்பான வழக்குகள் அவரிடமே செல்வது எப்படி? ஏற்கெனவே அவரால் விசாரிக்கப்பட்டு இரு நீதிபதிகள் அமர்வுக்குப் போய், அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிற நிலையில், மீண்டும் அதே வழக்கை, அதே நீதிபதி மீண்டும் விசாரிப்பது எப்படி என்பதெல்லாம் மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

 நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

தான்தோன்றித்தனமாக தனி அதிகாரம் படைத்த ஒருவரைப் போல நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் நடந்து கொண்டிருப்பதை எந்த விதத்தில் புரிந்து கொள்வது?
இரண்டாவது, மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் ‘கோயில் அறங்காவலர் குழு தீபத்தை ஏற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. அதை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

ஒருவேளை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றால், ஆட்சியர் உச்ச நீதிமன்றத்துக்குத்தானே பதிலளிக்க வேண்டும். மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? அப்படி என்றால், உச்ச நீதிமன்றத்தை விட உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவரா நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.

நீதிபதிகள் சட்டத்திற்கு உட்பட்டும், ஆதார ஆவணங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டுமே தவிர, தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில், தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் தீர்ப்பின் மீது திணிப்பது தவறான போக்குகளுக்கே வழிவகுத்து, தவறான தீர்ப்பாகத்தான் அது அமையும்.

ஆகவே, நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுடைய அத்துமீறல் சம்பந்தமாகத் தலைமை நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நேற்றைய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பரங்குன்றத்தில் கூடி ‘அரோகரா’ முழக்கமிட்டு, மிக அமைதியான முறையில் தீபத் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஆனால், இன்றைக்கும் தீபத் திருவிழா நடத்தவில்லை என்கிற முறையில் சில அமைப்புகளும் சில நபர்களும் பொய் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தீபத் திருவிழாவில் வேறு எங்கேயுமே பிரச்னை இல்லை. “திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மீண்டும் ஓர் அயோத்தியை உருவாக்குவோம்” என்று ஏற்கெனவே பாஜக தலைவர் ஹெச்.ராஜா சொன்னது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது.

ஆகவே, அவர்களுடைய நோக்கம் தீபத் திருவிழாவோ, முருகன் மீதான பக்தியோ அல்ல. மாறாக, எப்படியாவது ஒரு மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் மண்டைக்காடு தொடங்கி திருப்பரங்குன்றம் வரை பல இடங்களில் அவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த மதவெறிச் சக்திகளும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலும் இதே வேலையில் தொடர்ந்து அவ்வப்போது ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பின்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் என்றைக்கும் ஆதரவாகவும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாகவும்தான் இருந்து வந்திருக்கிறார்கள். நேற்றைய திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான விவகாரத்திலும் மக்கள் தங்களுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம்

ஆகவே, மதவெறிச் சக்திகளுடைய இத்தகைய சதிச் செயல்களுக்கு எக்காரணம் கொண்டும் யாரும் இடம் தரக் கூடாது. அரசு இந்தப் பிரச்னையில் மிக விழிப்பாக இருந்து, சிறப்பான முறையில் தீபத் திருவிழாவை நடத்தி முடித்திருக்கிறது. மதச்சார்பற்ற கட்சிகளுடைய ஆதரவோடும், இடதுசாரிகளுடைய ஆதரவோடும் துணிச்சலாக இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு என்னுடைய பாராட்டுகள். உச்ச நீதிமன்றமும் ஒரு தீபம் ஏற்றுகிற பிரச்னையை ஏதோ அகில உலகப் பிரச்னை போலவோ அல்லது நாடு தழுவிய ஒரு பெரிய பிரச்னை போலவோ கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், அவர்கள் எங்கே தீபம் ஏற்றுகிறார்களோ அங்கே ஏற்றட்டும் என்கிற முறையில், சாதாரணமான பிரச்னையை அகில இந்தியப் பிரச்னையாக மாற்றி இருக்கிறார்கள். ஆகவே, இதனுடைய உள்நோக்கத்தை புரிந்து கொண்டு, உச்ச நீதிமன்றமும் தன்னுடைய இறுதித் தீர்ப்பில் இதற்கு ஒரு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில், மக்களுடைய உணர்வுகளுக்கும், மரபுகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் மதிப்பளித்துத் தெளிவான இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *