Tamilnadu
oi-Pavithra Mani
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அனுமதியின்றி நுழைந்து முதலமைச்சர் விஜயின் புகைப்படத்துடன் ரீல்ஸ் எடுத்ததுடன், மாணவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாட வைத்த சம்பவத்திற்கு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தவெகவைச் சேர்ந்த சிலர் கட்சி அடையாளங்களுடன் பள்ளி வளாகத்திற்குள் சென்று, முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி வீடியோ பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பள்ளி மாணவர்களை வரிசையாக அமர வைத்து, “நீண்ட நீண்ட காலம்…” என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை பாட வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவிய நிலையில், பள்ளி வளாகத்தை அரசியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாணவர்களை அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்தியுள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற சம்பவம் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் நடைபெற்றது. அங்கும் தவெகவினர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் கொண்டாட்டம் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிகளுக்குள் கட்சி அடையாளங்களுடன் சென்று எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் தவெக தலைமையே ஏற்கனவே நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
ஆனாலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.