கில்லி சரத்தை வீழ்த்திய திமுக.. பழைய பதிவுகளை ‘கூண்டோடு’ டெலிட் செய்யும் தவெக அமைச்சர்கள், MLAக்கள் | TVK Ministers and MLAs Launch Massive Social Media Post Deletion Drive

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

சென்னை: தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ‘கில்லி’ சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று, தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் அரசாங்கத்தையே உலுக்கி வரும் நிலையில், அக்கட்சியின் மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) இடையே கடுமையான பயமும் பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது.

நேற்று முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா தலைமையில் திமுக நடத்திய மாநிலம் தழுவிய வீதிப் போராட்டங்களின் ஆக்ரோஷத்தை பார்த்த தவெக மக்கள் பிரதிநிதிகள், தற்போது தங்களது சமூக வலைதள பக்கங்களை அவசர அவசரமாக ‘சுத்தம்’ செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே இன்ஸ்டாகிராம் (Instagram), பேஸ்புக் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் தவெக ஆபத்தாக முடியக்கூடிய பழைய பதிவுகள், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை டிவிகே அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் மொத்தமாக ‘டெலிட்’ (Mass Delete) செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TVK Ministers and MLAs Launch Massive Social Media Post Deletion Drive

‘ப்ளூ டிக்’ பிரபலங்களின் பதற்றம்; பின்னணி என்ன?

தற்போது அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ-க்களாகவும் இருக்கும் தவெக -வின் முக்கிய நிர்வாகிகள் பலரும், கடந்த காலங்களில் சினிமா, கலைத்துறை மற்றும் பொது வாழ்க்கையில் மிகவும் ஜாலியாக வலம் வந்தவர்கள். குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் பார்ட்டிகளில் எடுத்த வீடியோக்கள், கிரிக்கெட் மைதானங்களில் கொண்டாடிய கொண்டாட்டங்கள், சினிமா பாணி ‘Thug Life’ எடிட்கள் என ஏராளமான பதிவுகளை தங்களது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்கள் பதிவிட்டிருந்தனர். சிலர் பிளாக் டிக்கெட் கூட விற்றுக்கொண்டு அதற்கான போஸ்டுகளை போட்டு இருந்தனர்.

தற்போது அமைச்சர் ‘கில்லி’ சரத்தின் 2 வருட பழைய வீடியோவை திமுக எப்படி பூதக்கண்ணாடியை வைத்து தேடிப்பிடித்து, மாநில அளவிலான போராட்டமாக மாற்றியதோ, அதேபோல் தங்களது பழைய லூட்டிகளும் தங்களுக்கு எதிராகவே ஆயுதமாக மாறக்கூடும் என்று இவர்கள் அஞ்சுகின்றனர். எதிர்க்கட்சிகள் தங்களின் கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டி எடுத்து, அரசியல் ரீதியாக தங்களை காலி செய்துவிடுமோ என்ற பயத்தில், கடந்த வாரம் வரை ஆக்டிவாக இருந்த பல பதிவுகள் இப்போது காணாமல் போயுள்ளன.

திமுகவின் ‘தாக்குதலை’ எதிர்கொள்ள ஐடி விங் போட்ட அவசர உத்தரவு!

திமுகவின் தீவிரமான போராட்டக் குணம் மற்றும் அதன் டிஜிட்டல் தொழில்நுட்ப வலிமையை தவெக தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் களத்தில் அமைதியாக இருந்த திமுக, தற்போது அசுர பலத்துடன் வீதியில் இறங்கியுள்ளதை பார்த்தவுடன் தவெக -வின் தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தங்களது அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் ஒரு ரகசிய ‘அலர்ட்’ உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த உத்தரவின்படி:

அமைச்சர்கள் தங்களின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருக்கும் அனைத்து ‘ரீல்ஸ்’ மற்றும் சர்ச்சைக்குரிய பார்ட்டி வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும்.

தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் காட்டிய சொத்து விவரங்களுக்கு முரணாக இருக்கும் ஆடம்பர வாழ்க்கை முறையை காட்டும் எந்தவொரு பழைய புகைப்படமும் கணக்கில் இருக்கக்கூடாது.

குறிப்பாக, போதைப்பொருள் ஒழிப்பு கொள்கையை பேசும் தவெக -வுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மதுக்கோப்பைகளுடனோ அல்லது கிளப்களிலோ எடுக்கப்பட்ட பழைய பதிவுகள் ‘கூண்டோடு’ அழிக்கப்பட வேண்டும்.

இதன் காரணமாக, கடந்த 48 மணி நேரமாக பல தவெக நிர்வாகிகளின் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளின் எண்ணிக்கை மளமளவென குறைந்து வருகிறது.

நடுங்கும் டிவிகே கோட்டை; திமுகவின் அடுத்த மூவ்?

சமூக வலைதளங்களில் ஹீரோக்களாக வலம் வந்த தவெக -வினர், இன்று திமுகவின் தீவிரமான அரசியலை பார்த்து தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். “பதிவுகளை நீக்கினாலும் பரவாயில்லை, நாங்கள் அனைத்தையும் ஏற்கனவே ‘ஸ்கிரீன் ரெக்கார்ட்’ மற்றும் ‘ஆர்கைவ்’ செய்து வைத்துள்ளோம்” என்று திமுகவின் ஐடி விங் நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் சவால் விடுத்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *