விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள காமராஜர் நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது.
இந்தத் திருவிழாவின்போது காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தியதால் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொந்தரவாக இருந்துள்ளதாம்.
அதனால், நிகழ்ச்சியை நிறுத்துமாறு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறியுள்ளனராம்.
அப்போது அதனை ஏற்க மறுத்த மாரிக்கண்ணன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உடனடியாக காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கும் தகவல் கூறியுள்ளனர்.