அதுதான் திமுக-வுக்கு உண்மையான நெருக்கடி
தனுஷ் போன்ற புதிய முகங்கள் வருவதற்கான அச்சாரம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்; மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திப்பது, வெள்ளி விளக்கு பரிசு கொடுப்பது மாதிரியான நகர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தவெக-வைப் பொறுத்தவரை, ‘திமுகவுக்கு நாங்கள்தான் நேரடி போட்டி’ என்பதை நிலைநிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி பொசிஷன் செய்து கொண்டிருக்கும்போது, கட்சி நிதி தொடர்பாக அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அன்பில் மகேஸ் விவகாரம் பொருத்தமாக அமையும்.
மேலும் இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தையும் விஜய் அவர்கள் நேரடியாகக் களத்திற்குச் சென்று பேசும்போது அதன் வீச்சு வேறொன்றாக இருக்கும், அதுதான் திமுகவுக்கு உண்மையான நெருக்கடியாக இருக்கும்.

‘கழகம் அவருக்கு துணை நிற்கும்’ என்ற வார்த்தை அதில் இல்லை!
முந்தைய ஜெயலலிதா – கலைஞர் ஆட்சிக் காலத்தில் மாறி மாறி தேர்தல் வழக்குகள் போடுவது, கைது செய்வது போன்றவை நடந்திருக்கின்றன. ஆனால், அதிலிருந்து இது ஏன் தனித்துவமானது என்றால், இப்போது அரசியல் சூழலே மாறியிருக்கின்றது. அதனால்தான் இது திமுக-வுக்குப் பெரிய நெருக்கடியாக முக்கியத்துவம் பெறுகிறது.
‘இவரும் ஊழல்வாதிதான்’ என்று தனிநபராகப் பேசாமல், ‘ஊழல் கட்சி’ என திமுக-வை நோக்கி விஜய் ஃபிரேம் செய்கிறார். அதை எதிர்கொள்வது திமுக-வுக்குப் பெரிய சவாலாக இருக்கும்.
நேற்று அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டபோது மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கண்டன அறிக்கையில் ‘அன்பில் மகேஸ் இதனைச் சட்டப்படி எதிர்கொள்வார்’ என்ற வார்த்தைதான் இருக்கிறதே தவிர, ‘கழகம் அவருக்குப் பின்னால் துணை நிற்கும்’ என்ற வார்த்தை இல்லை.