“அன்புமணியே… நம்மோடு வந்துடுங்க!” – பாமகவை நோக்கி ஸ்டாலின்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் அடுத்த ட்விஸ்ட்! – Kumudam

Spread the love

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிருப்தி இருந்ததாகவும், இதையடுத்து பாஜக மேலிடத் தலைவர்கள் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் அன்புமணியுடன் பேசியதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. இறுதியில் பாமக பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றது.

அதே நேரத்தில், திமுக தரப்பிலிருந்து சபரீசன் உள்ளிட்டோர் அன்புமணியுடன் தொடர்பில் இருந்ததாகவும் அப்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. வடதமிழகத்தில் சில தொகுதிகளில் அதிமுக பெற்ற வெற்றிக்கு பாமகவின் ஆதரவும் ஒரு காரணம் என அதிமுக தரப்பினரே கருதியதாக கூறப்படுகிறது. ஆனால்… இப்போது கணக்கு மாறுகிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மதுராந்தகம்… தாராபுரம்… பாமகவை சுற்றும் கட்சிகள்!

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் பாமக யாருக்கு ஆதரவு தரும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்தது.

குறிப்பாக மதுராந்தகத்தில் பாமகவுக்கு இருக்கும் வாக்கு செல்வாக்கு காரணமாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாமகவின் ஆதரவை எதிர்பார்த்தன. அதிமுக தரப்பிலும் ஆதரவு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

திமுக, தவெக தரப்பிலிருந்தும் பாமகவிடம் தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தவெக தரப்பில், “விசிக நம்முடன் இருப்பதால் பாமக கூட்டணிக்குள் வருவதில் உங்களுக்கு சில சங்கடங்கள் இருக்கலாம். மதுராந்தகத்தில் கடந்த தேர்தலில் திமுக மூன்றாவது இடத்தில்தான் இருந்தது. இப்போது அதிமுகவுக்கு ஆதரவு தராமல் இருந்தால் நல்லது. அடுத்தடுத்த விஷயங்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்ற தொனியில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

எல்லா தரப்பிலும் பேச்சுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், பாமக கடந்த காலங்களில் இடைத்தேர்தல்களில் கடைப்பிடித்த புறக்கணிப்பு நிலைப்பாட்டை தொடர்ந்தது. “மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை” என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

மாநில நிர்வாகிகள் மற்றும் இரண்டு தொகுதிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அன்புமணி தெரிவித்தார். இந்த அறிவிப்பு அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவு தவெக தரப்புக்கு சாதகமாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேரடியாக தவெகவை ஆதரிக்காமல், அதிமுகவுக்கும் ஆதரவு வழங்காமல் இருப்பது பாமகவுக்கு ஒரு அரசியல் இடைவெளியை உருவாக்குகிறது.

திமுகவுக்கு ஏன் பாமக முக்கியம்?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுகவுக்கும் சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய கூட்டணி கணக்குகள், விசிகவின் தனித்த அரசியல் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்கு மத்தியில், பாமக ஆதரவு கிடைத்தால் அது களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கணக்கு திமுக தரப்பிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, “பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர முடியுமா?” என்ற கேள்வியும் திமுக வட்டாரத்தில் மீண்டும் எழுந்துள்ளதாக தகவல். பொதுவாக திமுக தரப்பிலிருந்து பாமக தலைவர்களிடம் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கம்.
ஆனால், இந்த முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாக அன்புமணியுடன் பேசியதாக பாமக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

“விசிக அங்கே… நாம இங்கே?” – ஸ்டாலின் சொன்னதாக தகவல்!

பாமக தரப்பில் விசாரித்தபோது கிடைத்ததாக கூறப்படும் தகவலின்படி, அன்புமணி யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்த பிறகு ஸ்டாலின் அவருடன் பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக திமுக கூட்டணியில் இடம்பெற விசிக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது விசிக தவெக கூட்டணியில் இருக்கிறது. அந்த சூழலில் திமுகவுடன் இணைந்து பாமக தனது அரசியல் பயணத்தைத் தொடர்வதில் என்ன பிரச்னை?” என்ற தொனியில் ஸ்டாலின் பேசியதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த உரையாடலில் அன்புமணி சமரசமானதாகவும், இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அவர் உறுதியளித்ததாகவும் பாமக தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“அறிவிப்பை மாற்றணுமா?” – பாமகவுக்குள் ஆலோசனை?

இங்குதான் அடுத்த ட்விஸ்ட். ஏற்கெனவே “யாருக்கும் ஆதரவு இல்லை” என்று அன்புமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, திமுகவுக்கு ஆதரவு என வெளிப்படையாக அறிவிப்பதா? அல்லது “யாருக்கும் ஆதரவு இல்லை” என்ற அறிவிப்பு அப்படியே இருக்கட்டும். களத்தில் பாமக நிர்வாகிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படட்டும் என்ற முடிவை எடுப்பதா? இதுகுறித்து அன்புமணி தரப்பில் தீவிர ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவும் கவனிக்கிறது?

இதற்கிடையே பாமக எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதையும் பாஜக உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கெனவே பாமக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், இப்போது அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்திருப்பது கூட்டணி அரசியலில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்ல… பாமக-திமுக இடையே ஏதேனும் புரிதல் உருவாகிறதா? தவெக பக்கம் பாமக நகர்கிறதா? அதிமுக கூட்டணியில் தொடருமா? என்ற கேள்விகளுக்கு இந்த இடைத்தேர்தல் களம் சில பதில்களைத் தரக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இடைத்தேர்தல் களத்தில் பாமக போட்டியிடவில்லை… ஆனால், பாமகவின் ஒரு முடிவு மட்டும் மூன்று பெரிய கட்சிகளின் கணக்கையும் மாற்றக்கூடியதாக இருக்கிறது!

அன்புமணியின் அடுத்த அறிவிப்பு என்ன?

“No Support” தொடருமா… அல்லது திமுகவுக்கு ‘Green Signal’ கிடைக்குமா? இதுதான் இப்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் அடுத்த கேள்வி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *