“அப்பா, என்னைக் காப்பாத்துங்க!” – லக்னோ தீயில் மகனின் கடைசி அழைப்பு | Lucknow Aliganj fire accident sukmani singh tragedy

Spread the love

“அப்பா, இங்க தீப்பிடிச்சிருச்சு, என்னைக் காப்பாத்துங்க!” – இது வெறும் வார்த்தைகள் அல்ல. லக்னோ தீயில் கருகிப் போன 23 வயது இளைஞன் சுக்மணி சிங்கின் மரண ஓலம். திங்களன்று வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்து, குறைந்தது 15 மாணவர்களின் உயிர்களைப் பறித்திருக்கிறது. இது விபத்தா அல்லது நிர்வாக அலட்சியத்தின் உச்சமா என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திங்கள்கிழமை மதியம் சுமார் 2:15 மணி. பிரப்ஜோத் சிங்கின் தொலைபேசி அலறியது. மறுமுனையில் பேசியது அவரது மகன் சுக்மணி. “அப்பா, அலுவலகத்தில் தீப்பிடித்துவிட்டது, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியிருக்கிறார். ஆனால், அந்த தந்தையால் தன் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீயில் சிக்கி, அந்த அழைப்புதான் சுக்மணியின் கடைசி அழைப்பாக மாறியது. பெற்றோரால் சரியான நேரத்தில் சென்று மகனைக் காப்பாற்ற இயலவில்லை.

போன் கால்

போன் கால்

சுக்மணி மட்டுமல்ல, ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற மற்றொரு இளைஞரின் தாயார் எழுப்பும் கேள்விகள் அதிகாரிகளின் மனசாட்சியை உலுக்குகின்றன. “சுமார் இரண்டரை மணி நேரம் என் மகன் புகை மண்டலத்தில் சிக்கியிருந்தான். கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் பிள்ளைகளைக் காப்பாற்றியிருக்கலாம். வீடியோ எடுப்பதற்குப் பதிலாக உதவி செய்திருந்தால், சில உயிர்களாவது பிழைத்திருக்கும். ஒருவேளை என் மகன்கூட காப்பாற்றப்பட்டிருப்பான்” என்று அவர் கண்ணீருடன் கூறுகிறார். ஆதித்யாவின் நண்பரோ, “கடவுள் ஏன் நல்லவர்களை இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்கிறார்?” என்று நொறுங்கிப்போகிறார்.

இதேபோல், குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த அப்துல் ரஹ்மானின் மரணம், அவரது முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தையையும், தாயையும் நிர்க்கதியாக்கியுள்ளது. “8-10 மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு வேலை கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்” என்று அவரது நண்பர் ஷேக் வேதனையுடன் சொன்னது கேட்பவர்களை கலங்க செய்தது. அப்துலின் மரணத்தால், அந்த முதிய தம்பதியினர் தனியாக தவிக்கவிடப்பட்டுள்ளனர்.

விதிமீறல்களின் விளைவா?

இந்த மரணங்களுக்கு யார் காரணம்? தரைத்தளத்தில் உள்ள விலங்குகள் விற்கும் கடைகளில் பற்றிய தீ, எப்படி ஒரு எரியும் நரகமாக மாறியது? பகுதிவாசிகள் சொல்லும் காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. “கட்டடத்தில் 20-25 ஏசிகள் பொருத்தப்பட்டிருந்தன, ஆனால் மின் இணைப்பு வெறும் 10KW திறனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. இது அப்பட்டமான விதிமீறல்” என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், “வெளியேற ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுவும் ஷட்டர்களால் பூட்டப்பட்டிருந்தது. ஒரு கதவாக இருந்திருந்தால்கூட உடைத்துக்கொண்டு சென்றிருக்கலாம். பிள்ளைகள் உள்ளே சிக்கிக்கொண்டார்கள். ஒரு பெண், கம்பியைப் பிடித்து தப்பினாள், காயப்பட்டாலும் உயிர் பிழைத்தாள்” என்று ஒரு பகுதிவாசி கதறும் காட்சி, நிர்வாகத்தின் அலட்சியத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

நடவடிக்கையும், கடந்தகால எச்சரிக்கைகளும்!

விபத்து நடந்த பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. லக்னோ வளர்ச்சி ஆணையம், மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டடத்தின் கூட்டு உரிமையாளர்களான ராம் கிருஷ்ணா உபாத்யாய், வீரேந்திர பிரசாத் சுக்லா, துஷார் கிருஷ்ணா ஜெய்ஸ்வால், சுரேஷ் குமார் சாஹு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கட்டடத்தின் மீதான புகார்கள் புதியதல்ல. 2016-ஆம் ஆண்டே, அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் காரணமாக இந்த கட்டடத்தை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வெறும் இரண்டு மாதங்களில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அன்று எடுக்கப்பட்ட முடிவு இன்று 15 உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

லக்னோ தீ விபத்து, வெறும் விபத்து அல்ல; அது விதிமீறல்களும், அலட்சியமும் சேர்ந்து நடத்திய ஒரு படுகொலை என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சாடுகிறார்கள்.

‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்ற சுக்மணியின் கடைசி வார்த்தைகள், பாதுகாப்பற்ற நகரங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் அபயக் குரலாகவே ஒலிக்கிறது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொண்டு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *