பின்கதைகள், எமோஷன்கள், திருப்பங்கள், அதிர்ச்சிகள் என விரிகிறது இரண்டாம் பாதி. உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், மருத்துவச் சவால்கள், சட்டப்போராட்டம் என ஒவ்வொரு கிளைகளாகத் தாவும் திரைக்கதை, சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதிய திருப்பங்களும், சவால்களும் வரிசைக்கட்டுகின்றன.

ஆனாலும், அவை அனைத்துமே அவசர அவசரமாக ஓடுவதும், முக்கியத் தருணங்களில் தலைதூக்கும் ‘க்ளிஷே’க்களும் உணர்வுபூர்வமான தருணங்களைத் தளர்த்திவிடவே செய்கின்றன. உணர்ச்சிப்போராட்டத்தைப் பேசும் இறுதிக் காட்சி அழுத்தம் கூட்டினாலும், அதில் சில ‘க்ளிஷே’த்தனங்கள் எட்டிப் பார்க்கவும் செய்கின்றன. நீதிமன்றத்தில் இப்படியெல்லாம் நாடகம் நடக்கும் வரை நீதிபதி பொறுத்திருப்பாரா என்பதெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, மருத்துவச் சவாலோடு உணர்ச்சி மோதலையும் கதையாக்கியது கவனிக்க வைத்தாலும், அதை மேம்போக்கான திரைமொழியில் பேசியது ஏமாற்றத்தையே தருகிறது.