தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்கு கசிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?” என்று கேள்வி எழுப்பி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது “Guidance TN’ அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.