மூன்று மாத அமெரிக்க – இரான் மோதல் அமெரிக்காவுக்கும், இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட அமைதி ஒப்பந்தத்துடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த மோதலின் மையமாக இருந்த இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தை ஏற்படுத்த நடந்த பேச்சுவார்த்தைகளிலும் இஸ்ரேல் கலந்துகொள்ளவில்லை.
இரான் ஒப்பந்தத்தை ஒட்டி எழும் முக்கிய கேள்வி, அமெரிக்காவின் கேந்திரக் கூட்டல்-கழித்தல் கணக்குகளில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை, தற்காலிகமாகவேனும் இஸ்ரேல் இழக்கிறதா என்பது.
காசா மீது இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களாலும், அதைத் தொடர்ந்து இரான் மற்றும் அதன் பிராந்தியக் கூட்டாளிகள் மீது நடத்திய தாக்குதல்கள் காரணமாகவும் இஸ்ரேல் சர்வதேச அளவில் ராஜீய ரீதியிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதா என்பது மற்றொரு கேள்வி.
இரான் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகள் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு வெளிப்படையாகத் தெரியவில்லை. எனினும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , இரானுடன் போரில் முழுமையான வெற்றியைப்பெறுவதற்கு முன்னால், அதனுடன் எந்தப் போர் நிறுத்தத்துக்கும் எதிர்ப்பானவராகவே இருந்தார்.

தற்போது, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, லெபனான் உட்பட அனைத்துப் போர் முனைகளிலும் உடனடிப் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்ற விஷயத்தை நெதன்யாகு நேரடியாகவே மறுத்திருக்கிறார்.
தெற்கு லெபனானில் தனது தேசப்பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேலின் நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். இந்த பாதுகாப்புத் தேவைகள் தொடரும்வரை தெற்கு லெபனானில் இஸ்ரேலின் பாதுகாப்பு வளையம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறியிருப்பது அமெரிக்க இரான் ஒப்பந்தத்தின் மையமான ஒரு அம்சத்துக்கு சிக்கல் கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.
லெபனானில் இருந்து இயங்கும் , இரானின் ஆதரவு பெற்ற ஷியா அமைப்பான, ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகள், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும், கடந்த இரு நாட்களாக நீடிக்கின்றன.
வெள்ளிக்கிழமை ஹெஸ்பொல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியப் படையினர் நால்வர் கொல்லப்பட்டதாகக் கூறிய இஸ்ரேல், அதற்குப் பதிலடியாக லெபனானின் தென் பகுதியில் விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதில் சுமார் 47 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியது.
இந்த தாக்குதல்களை அடுத்து வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடக்கவிருந்த அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையேயான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இரான் மறுத்ததாக செய்திகள் கூறின. இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரான் இந்த சம்பவங்கள் பற்றி கடும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், கத்தார் மத்யஸ்தத்தில் மீண்டும் லெபனானில் வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தற்போது வந்துள்ள செய்திகள் கூறுகின்றன.
லெபனான் மோதல்கள் அமெரிக்க-இரான் அமைதி ஒப்பந்தத்தை குலைக்கும் சாத்தியக்கூறு இருக்கும் நிலையில், இது குறித்து அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கையுடன் அணுகுகிறது.
நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா இரானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை பற்றி இஸ்ரேலிய கூட்டணி அமைச்சரவையில் பங்குபெற்றிருக்கும், அதி தீவிர வலது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் பென் க்விர் மற்றும் பேஸலல் ஸ்மோட்ரிச் இருவரும் தெரிவித்த கருத்துக்களை சாடினார்.
“உங்கள் குறிப்பான திட்டம்தான் என்ன ? நீங்கள் ( இஸ்ரேல்) 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. உங்களுக்குள்ள ஒவ்வொரு தேசியப் பாதுகாப்புப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் முயற்சியில், கொன்று கொண்டே இருக்க முடியாது”, என்று வான்ஸ் கூறியது அமெரிக்கா இஸ்ரேலின் நம்பகமான ஆதரவாளர் என்று நம்பிக்கொண்டிருந்த பல இஸ்ரேலியர்களை நிலைகுலையச் செய்திருக்கும்.
இரான் குறித்த இஸ்ரேலின் நிலைப்பாடு என்பது அதன் தேசப்பாதுகாப்பு தொடர்பானது என்ற கருத்தொற்றுமை இஸ்ரேலில் வலது – இடது என்ற கொள்கை நிலைப்பாடுகளைக் கடந்து பல கட்சிகளிடம் இருக்கிறது .
1979 இஸ்லாமியப்புரட்சி ஏற்பட்ட பின் இரானில் உருவான இஸ்லாமிய அரசு, இஸ்ரேலை மத்தியக் கிழக்கு பகுதியில் முக்கிய எதிரியாகக் கருதுகிறது. இஸ்ரேல் பாலத்தீனப் பிரச்னையில் மற்ற எந்த வளைகுடா நாடுகளும் காட்டாத கடும்போக்கு இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டை இரான் எடுத்து வந்திருக்கிறது.
இதனால் , இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தோன்றிய பகைமை உணர்வுடன், இரானின் ஏவுகணை பலமும், அதன் அணு சக்தி முயற்சிகளும் இஸ்ரேலுக்கு ராணுவ ரீதியான அச்சங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஆனால், இரானை மற்ற இஸ்ரேலிய நிர்வாகங்கள் அணுகியதற்கும் , வலது சாரி பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு அணுகும் முறைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
நெதன்யாகு இரானின் ராணுவ அச்சுறுத்தலை அமெரிக்காவின் உதவியுடன்தான் முறியடிக்க முடியும் என்று நம்பி பல ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்க அதிபர்களிடம் முயற்சி செய்து வந்திருக்கிறார். ஒபாமா, பைடன் நிர்வாகங்கள் நெதன்யாகுவின் பிரசாரத்துக்கு செவி சாய்க்கவில்லை என்பதுடன், இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறித்தான், ஒபாமா நிர்வாகம் 2015ல் இரானின் அணு சக்தி முயற்சிகளை சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவர மேற்குலக நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் பதவிக்காலத்தில், நெதன்யாகுவின் தொடர் முயற்சியால், அமெரிக்கா ஒரு தலைபட்சமாக இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.
இதை ஒரு மோசமான ஒப்பந்தம் , ஒபாமா தேவையில்லாமல் இரானுக்குப் பணத்தை அள்ளிக்கொடுத்துவிட்டார் என்றெல்லாம் வசைபாடிய டிரம்ப், இதை விட மேம்பட்ட ஒப்பந்தம் ஒன்றை இரானுடன் தனது நிர்வாகம் செய்யும் என்று கூறினார்.
டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், இரானுக்கெதிரான இஸ்ரேலின் தொடர் முயற்சிகள் மீண்டும் தொடர்ந்தன.

இரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு தாக்கினால் அதன் ராணுவ பலத்தை ஒழித்து, ஆட்சி மாற்றத்தையும் நிகழ்த்திவிடலாம் என்ற நெதன்யாகுவின் வாதத்தை டிரம்ப் நம்பி இந்தப் போரில் இறங்கியதாகவே செய்திகள் கூறுகின்றன.
வெனிசுவேலாவில் அதிபர் மதுரோவைக் கடத்திவந்து அங்கு ஒரு பொம்மை ஆட்சியை நிறுவிய பெருமிதத்தில் இருந்த டிரம்ப்புக்கு இரானிலும் அதே போன்ற ஒரு எளிதான வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான், இராக், லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடு, பொருளாதார அளவில் அமெரிக்காவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், ஆட்சி மாற்றத்தை தற்காலிகமாகவோ, நீண்ட காலத்துக்கோ ஏற்படுத்தியிருந்த வரலாறும் டிரம்ப்புக்கு நம்பிக்கையைத் தந்திருக்கலாம்.
ஆனால் இரான் இந்த அளவுக்கு இஸ்ரேல்-அமெரிக்கத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கும் என்பது அந்த இரு தரப்புகளும் எதிர்பாராத ஒன்று.
இரானுக்கு சாதகமான பூகோளம்
வெனிசுவேலாவுக்கோ இராக்கின் சதாம் ஹுசேனுக்கோ இல்லாத ஒரு பெருவாய்ப்பாக இரானுக்கு அதன் பூகோளம் இருக்கிறது என்ற உண்மையை இரான் இந்தப் போரின்போதே உணர்ந்தது. உலகின் எண்ணெய், எரிவாயு கப்பல் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் செல்லும் ஹோர்மூஸ் நீரிணை அதன் கடலோரத்தில் அமைந்திருக்கிறது என்பது, அதை தனது டிரோன்கள் மற்றும் கடலுக்கடியில் வைக்கக் கூடிய கண்ணி வெடிகள் மூலம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்பதை இரான் இந்தப் போரின் போது உணர்ந்து அதைப் பயன்படுத்தியத, போரின் திசையை அதற்கு சாதகமாகத் திருப்பியது.
போரில் அமெரிக்காவுக்கும் உலகப் பொருளாதாரத்துக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஹோர்முஸ் நீரிணை மீதான இரானியக் கட்டுப்பாடு அமெரிக்காவின் உள் நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக உருவெடுத்தது.
அமெரிக்க உள்நாட்டு அரசியலில் போரின் தாக்கம்
அமெரிக்காவின் நாடாளுமன்ற இரு அவைகளுக்கான இடைக்காலத் தேர்தல்கள் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் நிலையில், பெட்ரோல், எரிவாயு விலை உயர்வு அமெரிக்கத் தேர்தல்களில் எதிரொலித்து, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினரின் வாய்ப்புகளைப் பாதிக்கும். ஏற்கனவே டிரம்பின் செல்வாக்கு சரிந்து வருவதாக தொடர்ச்சியான பல கருத்துக் கணிப்புகள் காட்டி வரும் நிலையில், இந்தப் போரை உடனே முடிவுக்குக் கொண்டுவந்து, வரும் நவம்பருக்குள் எரிவாயு விலையை கட்டுப்பாடில் கொண்டுவந்துவிட்டால், தேர்தலில் தனக்கு பலத்த தோல்வியைத் தவிர்க்கலாம் என்பது டிரம்ப்பின் கணக்காக இருக்கலாம் என்று அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தத் தேர்தல்களில் குடியரசுக்கட்சி தோற்று, இரு அவைகளும் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைக்கு சென்றால், அது டிரம்புக்கு பெருத்த சிக்கலைத் தோற்றுவிக்கும்.
எனவே தன்னுடைய உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளுக்காக, இஸ்ரேலின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் எளிதில் வெல்லமுடியாத இரான் போரை முடிவக்குக் கொண்டுவருகிறார் டிரம்ப்.
டிரம்ப்பின் இந்த முடிவு இஸ்ரேலில் விரக்தியையும், வெறுப்பையும் ஆளும் கூட்டணிக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.
ஐரோப்பாவும் கைவிட்ட இஸ்ரேல்
பொதுவாகவே, இந்தப் போரை டிரம்ப் தன்னிச்சையாக, தனது நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் நடத்தினார் என்பது மட்டுமல்ல, மேற்குலகக் கூட்டாளி அமைப்பான நேட்டோ ( NATO) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் கூட அவர் கலந்தாலோசிக்காமல் தொடங்கினார் என்பது அக்கூட்டணி நாடுகளிடம் பெரும் கசப்பை ஏற்படுத்தியது.
நேட்டோ அமைப்பு நாடுகள் எதுவும் இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகத் தலையிடவில்லை என்பது தெரிந்த விஷயம்.
எனவே இரான் போரை டிரம்ப் எந்தக் காரணங்களுக்காக முடிவுக்குக் கொண்டுவந்திருந்தாலும், அது குறித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற பிற நேட்டோ அணி நாடுகள் திருப்தியையே தெரிவித்திருக்கின்றன.
இது இஸ்ரேலுக்கு உறுத்தலான விஷயம்தான். ஆனால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டதா என்பது வேறுவிஷயம்.

கேந்திர ரீதியில் இஸ்ரேல் தனித்து விடப்பட்டிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். இது நிரந்தரமானதாக இருக்குமா என்பது வேறு விஷயம்.
ஏனெனில் ஒட்டுமொத்தமாக இரானின் இஸ்லாமிய அரசு குறித்த மேலை நாடுகளின் பார்வையின் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடவில்லை,
மனித உரிமைப் பிரச்சனைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, கருத்து வேறுபடுபவர்களை ஒடுக்குவது போன்ற விஷயங்களில் இரான் குறித்த பல பிரச்சனைகளில் மேலை நாடுகள் இரான் மீது அதிருப்தியுடனேயே இருக்கின்றன.
ஆனால் இஸ்ரேலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கடும்போக்கு அரசு பாலத்தீன மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளில் காட்டி வரும் ராணுவ ரீதியான அணுகுமுறை தொடரும் வரை, ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேல் குறித்த கண்ணோட்டத்திலும் பெரிய மாற்றம் இருக்காது.
இரான் போரினால் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்போல, இஸ்ரேலிலும் வரும் அக்டோபருக்குப் பின் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நெதன்யாகு தோற்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இஸ்ரேலிய அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றன.
ஒரு மிதவாத அரசியல் தலைமை இஸ்ரேலில் தேர்தலுக்குப் பின் ஏற்படுமானால், இஸ்ரேலின் தற்போதைய கேந்திர ரீதியிலான தனித்துவிடப்பட்ட நிலைமை ஒரு தற்காலிகமானதாகவே அமையலாம்.!