அமெரிக்க – ஈரான் மோதல்: சுற்றி வளைக்கப்பட்ட இந்திய மாலுமிகள்.. அதிர்ச்சி வீடியோ! – Kumudam

Spread the love

உலகளவில் கடல்சார் பணியாளர்களாகச் சேவை ஆற்றுபவர்களில் 12.2 சதவீதத்துடன் இந்தியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானின் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளவில் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. இதில் இந்திய மாலுமிகள் பலர் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த மோதலுக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்தியர்கள் உட்படக் குறைந்தது 15 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் வெளியாக்கப்பட்ட ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்திய மாலுமிகள் சங்கம் (FSUI) ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஒரு பதற்றமான சம்பவத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை ஈரானின் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) படகுகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியதும், அதில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டபோது கப்பலுக்குள் இருந்த 21 இந்திய மாலுமிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடிய காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் இந்திய மாலுமிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் தூதரை நேரில் அழைத்து இந்திய அரசு தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, கப்பல் நிறுவனங்கள் இந்திய மாலுமிகளை அப்பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்களில் பணியமர்த்தக் கூடாது என இந்தியக் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அப்பகுதியில் பயணிக்கும் கப்பலின் மாலுமிகள் மற்றும் கேப்டன்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடனும், கடல்சார் பாதுகாப்பு எச்சரிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *