அதனால், `அமைச்சரானதற்குச் சந்தோஷப்படுவதா அல்லது துறைகள் இல்லாமல் வலம் வருவதற்காக வருத்தப்படுவதா…” என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் துறை இல்லாத அமைச்சர்கள்.
முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து அமைச்சர் பதவியைப் பெறுவதைவிட பெரிய சாகசம், அதற்கான துறைகளைப் பெறுவதுதான். கடந்த ஆட்சியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவைக்குள் இடம்பிடித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு எந்தத் துறையும் ஒதுக்கப்படவில்லை.
அதனால் துறை இல்லாத அமைச்சராகவே தன்னுடைய பதவிக் காலத்தை முடித்தார் முன்னாள் அமைச்சர் (!?) ஜான்குமார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கி 2011-ல் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, மே மாதம் 16-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால் ஆகஸ்ட் மாதம் அதாவது சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகுதான், தான் நியமித்த அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கினார். அநேகமாக, புதுச்சேரி அரசியல் வரலாற்றில் அமைச்சர்களுக்கு அவ்வளவு காலதாமதமாக துறைகளை ஒதுக்கிய நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும்.
அதன்பிறகு 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, மே மாதம் 7-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் ஜூன் 27-ம் தேதிதான் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதாவது 51 நாட்களுக்குப் பிறகு. அதேசமயம் ஜூலை 11-ம் தேதி, அதாவது 65 நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கான துறைகளை ஒதுக்கினார் முதல்வர் ரங்கசாமி.
அதனால் இந்த முறை முதல்வர் தன்னுடைய பழைய சாதனைகளை முறியடிக்க நினைக்காமல், மக்கள் பாதிக்கப்படாதவாறு அமைச்சர்களுக்கு துறைகளை உடனே ஒதுக்க வேண்டும்.