தவெக அமைச்சரவையில் விஜயபாஸ்கர்? விஜய் போட்ட கண்டிஷன்..! – Kumudam

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தவெகவோ சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்ததால், அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் எடப்பாடி அணிக்கே திரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் சிவி சண்முகம் அணியில் இருந்த விஜயபாஸ்கர் போன்றோர் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில், விஜய்பாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாகவும், அமைச்சரவையில் இடம் கேட்பதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயபாஸ்கரை பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பிருந்தே எடப்பாடி தலைமையிலான அதிமுக மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என்ற யோசனையில் அவர் இருந்ததாகவும், அதற்காக திமுக தலைமையிடம் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவருக்கு உதவிகரமாக இருந்தது யாரென்றால், சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் இருந்த சமயத்தில் அந்த துறையின் செயலாளராக இருந்த உமாநாத் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 2021 திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் விஜயபாஸ்கர் மற்றும் உமாநாத் இடையே நல்ல தொடர்பு இருந்ததாகவும், 2026 தேர்தலுக்கு பிறகு கொடைக்கானலுக்கு ஸ்டாலின் சென்ற போது திமுக அமைச்சர் ஒருவரின் உதவியோடு ஸ்டாலினிடம் விஜய்பாஸ்கர் ஃபோனில் பேசியதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக தலைமை, கொடைக்கானலிலே அமைச்சரவை பட்டியலை எல்லாம் தயார் செய்து வைத்ததாகவும், அப்போது அந்த லிஸ்டில் தன் பெயர் இடம்பெறுவதற்காக விஜயபாஸ்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ரிசல்ட்டோ திமுகவிற்கு எதிராக வந்ததால், திமுகவில் இணையும் முடிவை விஜயபாஸ்கர் கைவிட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தன்னுடைய வண்டியை பனையூர் பக்கம் திருப்ப நினைத்த விஜயபாஸ்கர், கூட்டத்தோடு கூட்டமாக தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார் என்றும், இப்போது அந்த முடிவும் பலனளிக்கவில்லை என்பதால் நேரடியாக தவெகவில் இணையலாம் என்று விஜயபாஸ்கர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், விஜய்யோ “நீங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைத்தேர்தலை சந்தியுங்கள்.. பிறகு என்னவென்பதை பார்க்கலாம்” என்று விஜயபாஸ்கரிடம் சொல்லிவிட்டாராம். இதனால் தான் தற்போது தன் நிலைப்பாட்டை விஜய்பாஸ்கர் வெளியிடாமல் இருக்கிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒருவேளை தவெகவில் ஐக்கியமாகி வெற்றிப் பெற்றாலும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம் விஜயபாஸ்கர்.

எனவே, விஜயபாஸ்கர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *