மதுரை மத்தி தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சுந்தர் .சி ஆகிய இருவரையும் தோற்கடித்து 15,354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் மாதர் பதுருதீன் (எ) முஸ்தபா.
மிகப்பெரிய ஸ்டார்களாக இருந்த இருவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பது தான் மதுரை ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
யார் இந்த முஸ்தபா? எப்படி இந்த வெற்றி சாத்தியம் ஆனது?
முஸ்தபாவின் பூர்விகம் மதுரை. வேலைக்காக அவருடைய குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்து, அங்கு மட்டன் கடை நடத்தி வந்திருக்கிறார். அரசியலில் ஈடுபட வேண்டுமென எண்ணத்தால் 2018 ஆம் வருடம் அ.ம.மு.க -வில் இணைந்து டிடிவி.தினகரனுடன் பயணிக்க தொடங்கி பின்பு கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்.
சில காரணங்களால் 2019ல் அமமுகவிலிருந்து விலகி ’தமிழ்நாடு முஸ்லீம் லீக்’ என்ற கட்சியை தொடங்கி நிறுவனதலைவராக பொறுப்பு வகித்திருக்கிறார். விஜய் கட்சி தொடங்கியவுடன் அவருக்கு அதரவு தெரிவித்த முஸ்தபா பின்பு தவெகவின் பேச்சாளராகி மாறி ஊடகங்களில் பேசி வந்தார்.
மதுரை பூர்விகம் என்பதால் முஸ்தபாவிற்கு சிறுபான்மையின மக்கள் அதிகம் இருக்க கூடிய மதுரை மத்தி தொகுதி ஒதுக்கபட்டது. தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நடத்தியதால் தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை இவரால் பெற முடிந்தது.
அதோடு ‘நான் வெற்றி பெற்றால் என்னுடைய சொந்த செலவில் சிறுபான்மையின மக்களின் புனித தலங்களுக்கு அழைத்து செல்கிறேன்’ என வாக்குறுதி கொடுத்தது தொகுதி முழுவதும் பேசப்பட்டது. த.வெ.க தலைவர் விஜயின் அலை, முஸ்தபா மீது சிறுபான்மையின மக்கள் வைத்த நம்பிக்கை ஆகியவை அதிமுக, திமுக வேட்பாளர்களை வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.