'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா?' – கிருஷ்ணகிரி நடுகற்களின் சிறப்புகள் என்னென்ன?

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளியில் அமைதியாக நின்றுகொண்டிருக்கும் சில நடுகற்கள், இன்று தமிழக வரலாற்றுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

சாதாரண வீரர்களின் நினைவுக்கற்களாகக் கருதப்பட்ட இந்நடுகற்கள், உண்மையில் 13-ம் நூற்றாண்டு அரசியல் மோதல்களின் மறைந்திருக்கும் சாட்சிகள் என்கிற புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, தமிழகத் தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் இணைந்து மேற்கொண்ட மீளாய்வில்தான், தமிழகத்தில் முதன்முறையாக அரச சின்னங்களோடு கூடிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள்

இந்த ஆய்வு குறித்து கோவிந்தராஜ், தமிழ்செல்வன், பென்னேஸ்வரன் உள்ளிட்ட ஆய்வாளர்களிடம் பேசியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

தொகரப்பள்ளி சாணாரப்பன் மண்டபப் பகுதியில் உள்ள நடுகற்கள் குறித்து ஆய்வாளர்கள் ஏற்கனவே ஆய்வு செய்திருந்தனர். அப்போது அங்கிருந்த மூன்று கல்வெட்டுகள், 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவந்தது.

அந்தக் கல்வெட்டுகள் கூறிய தகவலின்படி, “விளம்பி” வருடம் மார்கழி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஒரு ஊரழிவுச் சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்காக இந்த நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் பல ஆண்டுகளாக வழிபாட்டிற்காக நடுகற்கள் மீது எண்ணெய் பூசப்பட்டிருந்ததால், அதிலிருந்த சிற்ப வடிவங்களையும் சின்னங்களையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

தற்போது தமிழக அரசு அமைத்துள்ள நடுகற்கள் ஆவணப்படுத்தும் குழு, அந்த எண்ணெய் படிவங்களை அகற்றிய பிறகே பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் முதன்முறை!

இதுகுறித்து ஆய்வாளர் கோவிந்தராஜ் கூறுகையில், “தமிழக நடுகல் வரலாற்றில் முதன்முறையாக அரச சின்னங்களோடு கூடிய நடுகற்கள் தொகரப்பள்ளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார்.

நடுகல்
நடுகல்

மீளாய்வின்போது நான்கு நடுகற்களில் ‘வில் சின்னம்’ தெளிவாகப் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வில் சின்னம் சாதாரண குறியீடல்ல. சேரர்களின் அரச அடையாளமாக அறியப்படும் சின்னம் இதுவே.

சேரர்களின் கிளைக் குடியினராக விளங்கிய அதியமான்களும் இந்த வில் சின்னத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

யார் இந்த விடுகாதழகிய பெருமாள்?

இந்த நடுகற்கள், மூன்றாம் குலோத்துங்க சோழனின் சமகாலத்தவரான விடுகாதழகிய பெருமாள் என்பவரோடு தொடர்புடையவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிற்கால அதியமான்களில் புகழ்பெற்ற அரசராக விளங்கிய அவர், தனது ஆட்சிப் பரப்பை வடக்கே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லட்டிகம் வரை விரிவுபடுத்தியிருந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

லட்டிகம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில், “தகடூர் அதியமான் விடுகாதழகிய பெருமாள்” எனத் தனது பெயரையும், ஏழு இடங்களில் வில் சின்னங்களையும் பொறித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தனது வெற்றிகளை பாடல் வடிவிலான கல்வெட்டுகளாகவும் பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலை திருமலை, ராயக்கோட்டை மலை, குந்துக்கோட்டை மலை உள்ளிட்ட இடங்களிலும் இவரது பாடல் கல்வெட்டுகளும் வில் சின்னங்களும் காணப்படுகின்றன.

“தொகரப்பள்ளி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் அதியமான், இந்த விடுகாதழகிய பெருமாளே என்பதற்கான மிக முக்கிய சான்றாகவே இந்த வில் சின்னங்கள் இருக்கின்றன” என்கிறார் தமிழ்செல்வன்.

அம்பு தைத்த புலி… என்ன சொல்கிறது?

இந்த ஆய்வின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி, நடுகற்களில் காணப்படும் சிற்பங்கள்தான்.

ஒரு நடுகல்லில் மேடையின்மீது நின்ற காட்டெருமையின் உடலில் அம்பு பாய்ந்திருப்பதும், அருகில் வீரன் வில்லும் வாளும் ஏந்தி நிற்பதும் காணப்படுகிறது.

நடுகல்
நடுகல்

மற்றொரு நடுகல்லில், வீரனை எதிர்நோக்கி மேடையின்மீது அமர்ந்திருக்கும் புலியின் உடலிலும் அம்பு பாய்ந்திருப்பது போல வடிக்கப்பட்டுள்ளது. அதன் வால் கீழே தொங்குகிறது.

வழக்கமாக “புலிக்குத்திப்பட்டான் கற்கள்” என்றால், புலியும் வீரனும் நேரடி சண்டையில் ஈடுபட்டிருப்பது போல வடிவமைக்கப்படும். ஆனால் இங்கு புலி தாக்கும் நிலையில் இல்லை. மாறாக தோல்வியடைந்த அடையாளமாக அமர்ந்திருக்கிறது.

இதனால்தான் ஆய்வாளர்கள் இதை வெறும் வேட்டைக் காட்சி அல்ல… “புலிச்சின்னம் கொண்ட அரசரைத் தோற்கடித்த வெற்றிச் சின்னம்” என விளக்குகின்றனர்.

“புலி சோழர்களின் அரச அடையாளம் என்பதால், இது சோழர்சார்பு தலைவரைத் தோற்கடித்ததற்கான அரசியல் குறியீடாக இருக்கலாம்” என்கிறார் பென்னேஸ்வரன்.

சோழர்களின் வீழ்ச்சிக் கால அரசியல்

மூன்றாம் ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ அரசின் செல்வாக்கு கடுமையாக குறைந்து கொண்டிருந்தது. குறுநிலத் தலைவர்களே தனித்தனி ஆட்சிச் சக்திகளாக மாறியிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில்தான் காடவர் கோன் கோப்பெருஞ்சிங்கன் போன்ற குறுநிலத் தலைவர்கள் சோழ அரசையே சவாலுக்கு உட்படுத்தினர்.

இந்தச் சூழலில், தொகரப்பள்ளியில் நடைபெற்ற ஊரழிவுச் சண்டையில் சோழர்சார்பு தலைவர்களையும், காட்டெருமை சின்னம் கொண்ட மற்றொரு தலைவரையும் விடுகாதழகிய பெருமாள் தோற்கடித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதனால்தான் இங்கு:

வில் — வெற்றியின் சின்னமாகவும்

புலி, காட்டெருமை — தோல்வியின் சின்னங்களாகவும்

காட்டப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.

நடுகல்
நடுகல்

வரலாற்றில் புதிய அத்தியாயம்

தமிழகத்தில் முதன்முறையாக அரச சின்னங்களோடு கூடிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடமாக தொகரப்பள்ளி தற்போது வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது.

சோழர்களின் இறுதிக்கால அரசியல், குறுநில அரசர்களின் ஆதிக்கம், ஊரழிவுச் சண்டைகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள இந்த நடுகற்கள் முக்கிய ஆதாரங்களாக அமையும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின்போது ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, விஜயகுமார், பாலாஜி டெய்சிராணி மற்றும் லாசிமாபேகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *